லடாக்: உலகிலேயே ஆக உயரமான ரயில் நிலையத்தை லடாக்கில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, சீனாவின் டாங்குலா ரயில் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 5,068 மீட்டர் (16,627 அடி) உயரத்தில் அமைந்து முதலிடத்தில் உள்ளது.
இந்தச் சாதனையைத் தகர்க்கும் வகையில் இந்திய ரயில்வே துறையின் புதிய திட்டம் அமைந்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் தொடங்கி மணலி வழியாக லடாக்கின் லே பகுதிவரை 489 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தப் புதிய ரயில் பாதையை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
லடாக்கின் லே நகரில் கடல் மட்டத்தில் இருந்து 5,256 மீட்டர் (17,244 அடி) உயரத்தில் இந்த நவீன ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதுவே உலகின் மிக உயரமான ரயில் நிலையமாகப் பெருமைபெறும்.
ஏறக்குறைய ரூ.1.31 லட்சம் கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பாதையில், சுந்தர் நகர், மண்டி உள்ளிட்ட முக்கியமான பகுதிகள் இணைக்கப்படுகின்றன.
இதில், ஏறக்குறைய 270 கிலோ மீட்டர் தூரம் வரை மலைகளைத் துளைத்து சுரங்கங்கள் வழியாக ரயில் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணி கடினமான புவியியல் சூழல், கடுமையான வானிலை, செங்குத்தான மலைச்சரிவுகள், அதிக உயரத்தில் பணிபுரிவது போன்ற சவால்கள் நிறைந்தது.
எனினும், நாட்டின் பாதுகாப்பு, பொருளியல் வளர்ச்சியை மையமாகக்கொண்டு, இந்தப் பொறியியல் சாதனை குறித்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
