மத்தியப் பிரதேசம்: வரும் 2028ல் நடைபெறவுள்ள சிம்ஹஸ்த கும்பமேளா பெருவிழாவுக்காக கோயில் நகரமான உஜ்ஜயினுக்குப் பொலிவூட்ட ஏறத்தாழ ரூ.950 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களை மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தொடங்கி வைத்துள்ளார்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அந்த நிகழ்வின்போது ஏறத்தாழ 40 கோடி வருகையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உஜ்ஜயினியில் உள்ள அங்காரேஷ்வர் மகாதேவர் கோயில் மறுசீரமைப்பு, நகரம் முழுவதும் உள்ள 84 சிவன் கோயில்களில் வசதிகளை மேம்படுத்துவது, ஏறத்தாழ 50 கிலோமீட்டர் சாலைகள் அமைப்பது ஆகிய மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இவை நகரத்தின் சமய, சமூகப் பாரம்பரியத்தை வலுப்படுத்தும் என்று உஜ்ஜயின் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தக் கோவிலின் மறுசீரமைப்புக்காக 83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தின் விரிவாக்கம், சிறப்புக் காத்திருப்புக் கூடம், பொருள் வாங்க வசதிகள், முறையான வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பிற வசதிகள் அமைக்கப்படும்.
கோவில்களுக்கான மேம்பாட்டுப் பணிகளின் முதல் கட்டத்திற்கு ஏறத்தாழ ரூ.3.80 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தரைத்தளம், சுவர்கள், குடிநீர் வசதிகள், பக்தர்களுக்கான நிழற்குடைகள், இருக்கைகள், கழிப்பறைகள், விளக்கு வசதிகள், மேம்படுத்தப்பட்ட நடைபாதைகள் ஆகியவற்றுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.
சாலை அமைப்பு, விரிவாக்கத் திட்டங்களுக்கு மொத்த வரவு செலவுத் திட்டத்தின் கிட்டத்தட்ட பாதியான ரூ.495 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கூடுதலாக ரூ.370 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) 48 விவசாயிகளுக்கு ரூ.37 கோடியை வழங்கி திரு யாதவ் இழப்பீடு வழங்கும் செயல்முறையைத் தொடங்கி வைத்தார்.
மேம்படுத்தப்பட்ட சாலை இணைப்பு, குளியல் படித்துறைகள், பிற முக்கிய இடங்களை அணுகுவதற்கு வசதியாக இருப்பதால் இந்த ஆன்மீக கூட்டத்தின் போது புனிதப் பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்ஹஸ்தா 2028க்கான தயாரிப்பாக, 10 துறைகள் முழுவதும் 13,851 கோடி ரூபாய் மதிப்பிலான 128 திட்டங்களுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், உஜ்ஜயினியின் விரிவான உள்கட்டமைப்பு சீரமைப்பிற்கு மத்தியில் இந்த மேம்பாட்டு திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன.
