விமான விபத்து குறித்து மூன்று மாதங்களில் விசாரணை அறிக்கை

2 mins read
894ea0b9-04cb-4322-821b-74bf07ee9496
விபத்தில் சிக்கிய விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: ஏர் இந்தியா விமான விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், விபத்து குறித்து விசாரணை நடத்த ஏதுவாக, இந்தியாவின் விமானப் போக்குவரத்து அமைச்சு உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

சனிக்கிழமை ஜூன் 14ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசியபோது, மத்திய பொது விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு இத்தகவலை வெளியிட்டார்.

விபத்தில் சிக்கிய விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அக்குழு உடனடியாக விசாரணையைத் தொடங்க உள்ளது.

விபத்துக்கான காரணம் என்ன என்பதை ஆய்வு செய்து, நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உருவாக்கத் தேவைப்படும் நடவடிக்கைகள் குறித்து விசாரணைக்குழு அறிக்கை அளிக்கும்.

“எதிர்காலத்தில் இதுபோன்ற விமான விபத்துக்களைத் தடுக்கவும் திறம்பட நிர்வகிக்கவும் ஒரு உறுதியான கட்டமைப்பைப் பரிந்துரைப்பதும் இந்தக் குழுவின் முதன்மை நோக்கம்,” என்று விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர் மட்டக் குழு அமர்ந்து, பல்வேறு பங்குதாரர்களுடன் பேசவும், அவர்களின் விசாரணையின்படி தேவையான வேறு எந்த முக்கியமான நிபுணருடனும் கலந்து ஆலோசிக்கவும் விவாதிக்கவும் அரசாங்கம் மூன்று மாத கால அவகாசம் நிர்ணயித்துள்ளது,” என்று அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார்.

“கறுப்புப் பெட்டி கிடைத்திருப்பதால், விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB), அதில் உள்ள தகவல்களைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

“கடைசி தருணங்களில் என்ன நடந்திருக்கும் என்பது தொடர்பான ஆழமான தகவல்களைப் பெற முடியும் என நம்புகிறோம். விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்,” என அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாக ஏஎன்ஐ முகவை செய்தி தெரிவிக்கிறது.

இதனிடையே, ஏர் இந்தியா விமானம் ஏஐ171 விபத்துக்குள்ளானதில் மாண்டோர் எண்ணிக்கை 279ஆக அதிகரித்துள்ளது.

இறந்தவர்களில் விமானத்தில் இருந்த 241 பேரும் அது விழுந்த பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த 38 பேரும் அடங்குவர். அந்த 38 பேரில் மருத்துவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மருத்துவ மாணவர்கள், ஊழியர்கள், மேகானி நகர் வட்டாரவாசிகள் உள்ளிட்டோர் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

அந்த போயிங் 787 டிரீம்லைனர் விமானத்தில் இருந்த ஒரு பயணி மட்டும் உயிர்தப்பினார்.

மருத்துவ மாணவர்களுக்கான உணவுக்கூடத்தின் கூரைப்பகுதியில் விமானத்தின் கறுப்புப் பெட்டி விழுந்து கிடந்தது என்று காவல்துறை இணை ஆணையர் நீரஜ் பத்குஜார் தெரிவித்தார்.

விமானம் விழுந்த மருத்துவக் கல்லூரி வளாகத்திலும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் தேடுதல் பணிகள் தொடர்ந்தன.

“மரபணுச் சோதனை மூலம் மாண்டவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக உடற்பாகங்கள், முழு உடல் என மொத்தம் 319 உடற்பகுதிகளைச் சேகரித்து அனுப்பியுள்ளோம்,” என்று குஜராத் மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மருத்துவக் கல்லூரி வளாகக் குடியிருப்பில் தங்கியிருந்த பத்து மருத்துவர்களும் அவர்களின் உறவினர்கள் சிலரும் மாண்டுவிட்டதாக அரசாங்க வட்டாரங்களைச் சுட்டி, என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

எம்பிபிஎஸ் மாணவர்கள் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்