+ https://www.straitstimes.com/asia/south-asia/air-india-crash-grief-turns-into-anger-as-families-continue-agonising-wait-for-bodies
அகமதாபாத்: ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. எனினும் இதற்கு அதிக காலம் ஆவதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
ஆனால், மரபணுச் சோதனை மூலம் இறந்தோரை அடையாளம் கண்டு உறுதி செய்யும் மருத்துவர்களோ, இந்த நடைமுறை மிக நுணுக்கமானது, அதிக காலம் ஆகக்கூடியது என அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் மருத்துவர் ரஜ்னிஷ் படேல் கூறினார்.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் வீடு திரும்பியுள்ளனர் என்றும் ஓரிருவர் மட்டுமே தீவிர சிகிச்சையில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, மரபணுச் சோதனை மூலம் அடையாளம் காணப்பட்ட சில பயணிகளின் உடல்கள் ஜூன் 14ஆம் தேதி மாலை வெள்ளை நிறத்திலான சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஜூன் 15 காலை நிலவரப்படி, 31 பேர் அடையாளம் காணப்பட்டு, உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, இறுதிச்சடங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
உடல்களை ஒப்படைக்கும்போது சவப்பெட்டிகளைத் திறந்து பார்க்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் ஏஎஃப்பியிடம் கூறினார்.
விபத்துப் பகுதிக்குச் சென்ற உடனேயே கண்ணில்பட்ட எட்டு உடல்கள் மட்டுமே தீயில் கருகாத நிலையில் காணப்பட்டதாகவும் மற்ற பெரும்பாலான பயணிகளின் உடல்கள் தீயில் கருகிவிட்டதாகவும் தெரிகிறது.
இதுவரை 270 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இடிபாடுகளுக்கு இடையே மேலும் சில சடலங்கள் சிக்கியிருப்பதாக பிஜே மருத்துவக் கல்லூரி மருத்துவர் தாவல் காமேட்டி தெரிவித்தார். மரபணுப் பரிசோதனையின் முடிவுகள் தெரிய 72 மணி நேரம் ஆகும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
“சிலரது உடல்கள் முற்றிலும் தீக்கிரையாகிவிட்டதால், எலும்பு, பற்களில் இருந்துதான் மரபணு மாதிரிகளை எடுக்க முடியும். மேலும் பலரது உறவினர்கள் நீண்ட தூரத்திலிருந்து வந்து சேர தாமதமாகிறது,” என்றும் மருத்துவர் தாவல் காமேட்டி விளக்கினார்.
எனினும், உயிரிழந்துவிட்ட பயணிகள் சிலரது உறவினர்கள், உடல்களை ஒப்படைக்க மிகுந்த காலதாமதமாகிறது என வருத்தத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களின் துக்கம் கோபமாக மாறக்கூடும் என்றும் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“முதலில் இந்த மரபணு விளையாட்டை நிறுத்துங்கள். 72 மணி நேரமாகும் என்றனர். அதன்பிறகு வேறு ஏதேனும் காரணங்களைச் சொல்வார்கள். எந்த நிலையில், எப்படி இருந்தாலும் அவர்கள் எங்களுடைய குழந்தைகள். எங்களால் ஜீரணித்துக்கொள்ள முடியும். எனவே உடல்களை உள்ளபடியே ஒப்படையுங்கள்,” என்று மும்பையைச் சேர்ந்த ரபிக் அப்துல் அஸிஸ் மேமன் என்பவர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
இவரது உறவினர் ஒருவர், மனைவி, இரு குழந்தைகளுடன் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.
“இப்போதே உடல்கள் சிதைந்து அழுகத் தொடங்கியிருக்கும். நான்கு நாள்களுக்குப் பிறகு ஒப்படைக்கும்போது துர்நாற்றம் வீசினால் எங்கள் மனம் என்ன பாடுபடும். எங்கள் அன்புக்குரியவர்களின் உடல்கள் எப்படி உள்ளன என்பதைக் காணொளியாக வெளியிட வேண்டும்,” என அவர் மேலும் வலியுறுத்தினார்.