விமானியின் முடிவால் நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய விமானம்

1 mins read
7957323a-a5fb-4987-b0fd-54735192cba1
ஏதோ தவறு நிகழ்ந்திருப்பதை உணர்ந்த விமானி, உடனடியாக விமானத்தை மேல் நோக்கி எழும்பச் செய்தார். - படம்: ஊடகம்

பாட்னா: விமானம் தரையிறங்கும் போது நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய சம்பவம் பாட்னா விமான நிலையத்தில் நிகழ்ந்தது. விமானியின் சாதுரியமான செயல்பாடு அனைவரையும் காப்பாற்றியது.

ஜூலை 15ஆம் தேதி டெல்லியில் இருந்து பாட்னாவுக்குச் செல்லவிருந்த இண்டிகோ விமானம் 173 பயணிகளுடன் குறித்த நேரத்தில் புறப்பட்டது. பின்னர் அந்த விமானம் பாட்னா சென்றடைந்ததும் அங்குள்ள விமான நிலைய ஓடுபாதையில் நிர்ணயிக்கப்பட்ட தரையிறங்கும் ஓடுபாதை தளத்துக்கு முன்னரே தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது.

ஏதோ தவறு நிகழ்ந்திருப்பதை உணர்ந்த விமானி, உடனடியாக விமானத்தை மேல் நோக்கி எழும்பச் செய்தார்.

பின்னர் விமான நிலையப் பகுதியில் மூன்றுமுறை வட்டமடித்த அந்த விமானம் சிறிது நேரத்தில் பாதுகாப்பாக தனக்குரிய ஓடுபாதையில் தரையிறங்கியது. அதில் இருந்த 173 பயணிகளும் நூலிழையில் உயிர் தப்பிய விவரம் அதன் பிறகுதான் தெரியவந்தது.

சரியான நேரத்தில் விமானிகள் எடுத்த முடிவு விமானம் விபத்தில் இருந்து தப்பிக்க காரணமாக அமைந்தது. ஒப்பீட்டு அளவில் பாட்னா விமான நிலைய ஓடுபாதை மற்ற ஓடுபாதைகளைவிடக் குறுகிய தொலைவைக் கொண்டது என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்