பெங்களூரு: கெம்பேகவுடா அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் ஒரு இட்லி 315 ரூபாய்க்கு விற்கப்படுவதாகப் பயணி ஒருவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இணையத்தில் வெளியிட்ட பதிவு பரவலானது. விமான நிலையத்தில் விற்கப்படும் உணவுப் பொருள்களின் விலை ஆக அதிகமாக உள்ளதாக இணையவாசிகள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
ரெட்டிட் சமூக ஊடகத்தில் அப்பயணி வெளியிட்ட பதிவில், பெங்களூரு கெம்பே கவுடா அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் தாம் ஒரு தட்டு நெய் பொடி இட்லி சாப்பிட்டதாகவும் அதன் விலை 315 ரூபாய் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பெங்களூரு மாநகரத்தில் விற்கப்படுவதைவிட விமான நிலையத்தில் நான்கு மடங்கு கூடுதலான விலையில் உணவுப் பொருள்கள் விற்கப்படுகின்றன என்றும் இந்த மோசடி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அந்தப் பதிவு இணையத்தில் பரவலான நிலையில், ஏராளமானோர் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தை விமர்சித்துள்ளனர். அவ்விவகாரத்தில் அரசு தலையிட்டு தீர்வு கொண்டுவரவேண்டும் என்றும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

