புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பேசுவதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தவிர்த்து வருவதாக ஜெர்மன் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களின் மீது அமெரிக்கா 50 விழுக்காடு வரி விதிப்பது புதன்கிழமை (ஆகஸ்ட் 27) முதல் நடப்புக்கு வந்துள்ள நிலையில், மோடி-டிரம்ப் தொடர்பான செய்தி வெளியாகி உள்ளது.
இந்தக் கூடுதல் வரி விதிப்பு நியாயமற்றது என இந்தியா கூறியது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக இந்தியப் பொருள்களுக்குக் கூடுதலாக 50 விழுக்காடு வரி விதிப்பதாக டிரம்ப் கூறியிருந்தார்.
ஆனால், நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்காகவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக இந்தியா விளக்கமளித்தது. அத்துடன், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.
இந்நிலையில், ஜெர்மன் செய்தித்தாளான ஃபிராங்ஃபர்ட்டர் ஆல்ஜெமைன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
“அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசுவதற்காகக் கடந்த இரு வாரங்களில் நான்கு முறை தொடர்பு கொண்டார். அந்த அழைப்பு எதையும் பிரதமர் மோடி ஏற்கவில்லை.
“தன்னுடனான உரையாடலை அதிபர் டிரம்ப் ஊடக விளம்பரத்திற்கு பயன்படுத்தக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை அதற்கு முக்கிய காரணம்,” என்று அச்செய்தி குறிப்பிடுகிறது.
மேலும் அது தெரிவிக்கையில், “அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக மோதலில், அனைத்துலக நாடுகளிடம் பொதுவான உத்தி ஒன்றைக் கடைப்பிடிக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
“முதலில் சம்பந்தப்பட்ட நாட்டின் மீது புகார் கூறுவது, மிரட்டுவது, நெருக்கடி கொடுப்பது, அதன் பின் பணிய வைப்பதுதான் அந்த உத்தி. ஆனால், அவருடைய இந்த உத்தி இந்தியாவிடம் எடுபடவில்லை,” என்று அச்செய்தி தெரிவித்துள்ளது.
ஜப்பானின் நிக்கேய் ஏஷியா செய்தித்தாளும் அதேபோன்றதொரு தகவலை வெளியிட்டுள்ளது.
“தமது தொலைபேசி அழைப்புகளை மோடி ஏற்காததால் டிரம்ப்பின் எரிச்சல் அதிகமாகிவிட்டது,” என்று அது செய்தி வெளியிட்டுள்ளது.
தாம் விதித்த வரியைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால், இந்தியாவின் சந்தையை அமெரிக்க வேளாண் தொழில் நிறுவனங்களுக்கு திறந்துவிட வேண்டும் என டிரம்ப் நிபந்தனை விதித்தார்.
ஆனால், இந்திய விவசாயிகளும் உள்ளூர் வர்த்தகங்களும் பாதிக்கப்படும் எனக் கூறி, அந்த நிபந்தனையை ஏற்க முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கு அமெரிக்காவுக்குச் செல்கிறது.
டிரம்ப்பின் 50 விழுக்காட்டு வரிவிதிப்பால் இவ்வாண்டுக்கான இந்தியப் பொருளியல் வளர்ச்சி 6.5 விழுக்காட்டில் இருந்து 5.5 விழுக்காட்டுக்குக் குறையக்கூடும் என்று பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்து உள்ளனர்.