வெள்ளத்தில் சிக்கி பரிதவிக்கும் பஞ்சாப்: நிலையை அறிய பிரதமர் மோடி வருகை

2 mins read
4c240933-5cf8-4689-83df-3383bfbf9df2
ஆபத்திலிருந்து மீட்கப்பட்ட முதியவர். - படம்: ஊடகம்

சண்டிகார்: பஞ்சாப்பில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46க்கு அதிகரித்துவிட்டதாக சனிக்கிழமை (செப்டம்பர் 6) மாலை நிலவரத்தை சுட்டிக்காட்டி அதிகாரிகள் கூறினர்.

வெள்ளப்பெருக்கில் 1.75 லட்சம் ஹெக்டரில் பயிர்கள் நாசமாகிவிட்டதாகவும் அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

ஆக மோசமாகப் பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டத்தில் நடைபெறும் நிவாரணப் பணிகளைப் பார்வையிட பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) செல்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

வெள்ளத்தில் வீடுகளையும் நிலங்களையும் இழந்து தவிக்கும் மக்களையும் விவசாயிகளையும் அவர் நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிவார் என்று பஞ்சாப் மாநில பாஜக தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

பஞ்சாப் மாநில வரலாற்றில் ஆக மோசமான வெள்ளத் துயர் ஏற்பட்டுள்ளது. அண்டைய இமாசலப் பிரதேசத்திலும் ஜம்மு காஷ்மீரிலும் விடாது பெய்த கனமழை காரணமாக பஞ்சாப்பின் சட்லெஜ், பீஸ் மற்றும் ரேவி ஆறுகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.

பஞ்சாப்பில் பலத்த மழை பெய்ததால் நிலைமை மோசமடைந்தது. போங் அணையின் மொத்த கொள்ளளவும் 1,390 அடிதான். ஆனால், பல நாள்கள் நீடித்த மழையால் அதன் நீர்மட்டத்தையும் தாண்டி 1,394.19 அடிக்கு வெள்ளநீர் ஓடியதால் அணை மூழ்கிவிட்டதாக, சனிக்கிழமை மாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளத்தில் சிக்கிய பல்லாயிரக்கணக்கான மக்கள் தத்தளித்து வருகின்றனர்.

மொத்தம் 23 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் உள்ள 1,996 கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாகவும் மாநில நிதி அமைச்சர் ஹர்ப்பால் சிங் சீமா கூறினார்.

46 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில் 3.87 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்களது உடைமைகளை இழந்து உயிர்பிழைக்கத் தத்தளித்து வருவதாக அதிகாரிகள் விவரித்தனர்.

ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 5 வரை 43 பேர் மரணமடைந்த நிலையில், மேலும் மூவர் உயிரிழந்துவிட்டனர். அந்த 46 பேரும் 14 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

குறிப்புச் சொற்கள்