மும்பை: கத்தித்துக்கு ஆளான பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து விடுவிக்கப்பட்டுவிவட்டதாக இந்துஸ்டான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதோடு, இதன் தொடர்பில் யாரும் தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை என்றும் மும்பை காவல்துறை கூறியுள்ளது. வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) காலை ஆடவர் ஒருவரைக் காவல்துறையினர் தடுப்புக் காவலில் வைத்திருந்தனர் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமையன்று (ஜனவரி 16) பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரின் முதுகிலிருந்து மீட்கப்பட்ட கத்தித்தகடு (blade) பாகத்தைத் தங்கள்வசம் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
கொள்ளையடிப்பதற்காக ஆடவர் ஒருவர் மும்பையின் பந்த்ரா வட்டாரத்தில் உள்ள சைஃப் அலிகானின் அடுக்குமாடி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அச்சம்பவம் குறித்து பல உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக ஊடகங்களில் அதிகமாகப் பரவி வருகின்றன.
சைஃப் அலிகானின் முதுகிலிருந்து மீட்கப்பட்ட ஒரு கத்தித்தகடு பாகம் தங்கள்வசம் இருப்பதாகக் கூறிய காவல்துறை, அதன் இன்னொரு பாகம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்தது. மும்பை காவல்துறையை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அத்தகவலை வெளியிட்டது.
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் சைஃப் அலிகான் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. ‘ஷத்குரு ஷரண்’ கட்டடத்தின் 12வது தளத்தில் உள்ள அவரின் வீட்டில் சம்பவம் நிகழ்ந்தபோது அவரின் மனைவியும் பிரபல நடிகையுமான கரீனா கபூர், அவர்களின் இரு மகன்கள், இல்லத்துப் பணியாளர்கள் ஐவர் ஆகியோரும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு சைஃப் அலிகான் அவசரமாக லீலாவதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரின் உடலில் ஆறு கத்திக்குத்துக் காயங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தாக்குதல்காரர் என்று சந்தேகிக்கப்படும் ஆடவர் கட்டடத்திலிருந்து தப்பியோடுவது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அவர் கையில் மரக்கட்டையால் ஆன ஒரு கோலும் நீளமான கத்தித்தகடும் இருந்தது தெரிந்தது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளியில் சந்தேக நபரின் முகம் தெளிவாகத் தெரிந்தது. அவர் கடைசியாக பந்த்ரா ரயில் நிலையத்தில் காணப்பட்டதாகவும் மும்பை காவல்துறையை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ குறிப்பிட்டது.
சந்தேக நபர் 35லிருந்து 40 வயதுக்கு உட்பட்டவர் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.