ராம்கர்: ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஏழைப் பெண் கவிதா குமாரி வறுமை, குடும்பச் சுமைகளுக்கு இடையே ஊர்க்காவல் படையில் சேர முயன்று, இறுதியில் தகுதித் தேர்வில் வாய்ப்பை இழந்தார். அவரது தன்னம்பிக்கையைச் சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி உள்ளனர்.
கணவரை இழந்த கவிதா குமாரிக்கு, வயது முதிர்ந்த மாமியார், மாமனார் உள்ளனர். மேலும், தனது இரு குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் உள்ளது.
குடும்பத்தைக் காக்க நிரந்தர வருமானம் தேவை என்பதால் ஊர்க்காவல் படைப் பிரிவில் சேருவதுதான் ஒரே வழி எனக் கருதி அதற்கு விண்ணப்பித்தார்.
முறையான உடற்பயிற்சி உடைகளோ, காலணிகளோ இல்லாத நிலையிலும், வெறும் காலோடு திடலில் ஓடிப் பயிற்சி எடுத்தார். அவர் ஓட்டப் பயிற்சி மேற்கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, பலர் கவிதா குமாரிக்கு உதவ முன்வந்தனர்.
இந்நிலையில், ராம்கர் மாவட்டத்தில் நடைபெற்ற ஊர்க்காவல் படைத் தேர்வில் 1,600 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. பத்து நிமிடங்களுக்குள் கடக்க வேண்டிய இலக்கை, கவிதா வெறும் கால்களுடன் எட்டு நிமிடம் 57 வினாடிகளிலேயே கடந்து முதற்கட்டத் தேர்வில் வெற்றி பெற்றார்.
ஆனால், அடுத்த கட்டமாக நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் அவருக்கு பெரும் சவால் காத்திருந்தது. வழங்கப்பட்ட மூன்று வாய்ப்புகளிலும் நிர்ணயிக்கப்பட்ட உயரத்தைத் தாண்ட முடியாமல் போனதால், அவர் துரதிர்ஷ்டவசமாகத் தேர்வில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டார். எனினும், சமூக ஊடகவாசிகள் பலரும் அவருக்குத் தொடர்ந்து உதவ முன்வந்துள்ளனர்.
