தமிழகம், மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் குறித்து மாறுபட்ட கணிப்புகள்

தமிழகம், மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் குறித்து மாறுபட்ட கணிப்புகள்

2 mins read
அசாமில் பாஜக, கேரளாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என கணிப்பு
dcb8096d-ccbc-42e1-b159-ab6db789312d
அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள். - தகவல்: டைம்ஸ் ஆஃப் இந்தியா, வரைகலை: செயற்கை நுண்ணறிவு

புதுடெல்லி: தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளைப் பல்வேறு நிறுவனங்களும் புதன்கிழமையன்று (ஏப்ரல் 29) வெளியிட்டன.

அசாமில் பாஜக தலைமையிலான கூட்டணி எளிதாக வெற்றிபெறும் என்றும் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கும் என்றும் அவை தெரிவித்தன.

ஆனால், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தின் தேர்தல் முடிவுகள் குறித்து மாறுபட்ட கணிப்புகளை அவை வெளியிட்டுள்ளன.

தமிழ்நாடு

மொத்தம் 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், 98-120 இடங்களைக் கைப்பற்றும் எனவும் 92-110 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் ‘ஆக்ஸிஸ் மை இந்தியா’ கணித்துள்ளது.

“அவ்விரு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பின்னுக்குத் தள்ளப்படும்,” என்றும் அது கணித்துள்ளது.

‘பி மார்க்’, ‘மேட்ரைஸ்’, பீப்பிள்ஸ் பல்ஸ்’ ஆகிய மூன்று கருத்துக்கணிப்புகளும் திமுக தலைமையிலான கூட்டணிக்கே பெரும்பான்மை கிடைக்கும் என்று கணித்துள்ளன.

இருப்பினும், முன்னைய தேர்தலைவிட குறைவான இடங்களையே அது பெறும் என்று அவை குறிப்பிட்டுள்ளன.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் புதன்கிழமையன்று தனது முடிவுகளை வெளியிடவில்லை.

இங்கு வெளியான மூன்று கருத்துக்கணிப்புகளில், பி மார்க் நிறுவனம் 294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்கச் சட்டமன்றத்தில் பாஜக பெரும்பான்மை பெறும் எனக் கணித்துள்ளது.

மேட்ரைஸ் நிறுவனம், பாஜக இதுவரை வெற்றி பெறாத அம்மாநிலத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் அக்கட்சி முன்னிலை வகிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

இதற்கு மாறாக, மூன்றாவது கருத்துக்கணிப்பான பீப்பிள்ஸ் பல்ஸ், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் பெருவெற்றி பெற்று, மம்தா பானர்ஜி தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியமைப்பார் எனத் தெரிவித்துள்ளது.

அசாம்

126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டமன்றத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் என நான்கு கருத்துக்கணிப்புகளும் தெரிவிக்கின்றன. இதன்மூலம் வடகிழக்கு மாநிலமான அசாமில் பாஜக முதன்முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளா

கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள், கேரளாவை ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு அதிகபட்சமாக 69 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என முன்னுரைத்துள்ளன.

அப்படி நடந்தால், 1977ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாக எந்த ஒரு மாநிலத்திலும் இடதுசாரிகள் ஆட்சியில் இல்லை எனும் நிலை உருவாகும்.

குறிப்புச் சொற்கள்