திருப்பூர்: பொதுமக்களுக்கு வந்த தபால்களையும் ஏடிஎம் அட்டை போன்றவற்றையும் விநியோகம் செய்யாமல் நான்கு ஆண்டுகளாக வந்த தபால்களை தமது வீட்டில் தபால்காரர் ஒருவர் மூட்டைகளாகக் கட்டி வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தட்டான் தோட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்னும் தபால்காரர் ஏன் அவ்வாறு செய்தார் என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நான்கு ஆண்டுகளாக வந்த கடிதங்களையும் பிற தபால்களையும் தமது வீட்டில் ஏழு மூட்டைகளாக அவர் கட்டி வைத்திருந்தார்.
வங்கிகளில் இருந்து வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்ட ஏடிஎம் அட்டைகள், குடும்ப அட்டைகள், ஆதார் அட்டைகள், நீதிமன்ற ஆணைகள், நீட் தேர்வு தொடர்பான தபால்கள் உள்ளிட்ட பல முக்கியமான தபால்களை அவர் விநியோகம் செய்யாமல் இருந்தார்.
கடந்த வாரம் செந்தில்குமார் வளர்க்கும் நாய்களில் ஒன்று ஒரு பெண்ணைக் கடித்ததைத் தொடர்ந்து அதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. நாய்க்கடி தொடர்பான விசாரணைக்கு வந்த அதிகாரிகள் செந்தில்குமார் வீட்டில் தபால் மூட்டைகளைக் கண்டு அதுபற்றி திருப்பூர் கோட்ட தபால் கண்காணிப்பாளர் அலுவலகத்திடம் தெரிவித்தனர்.
தபால் அதிகாரிகள் விரைந்து வந்து தபால் மூட்டைகளை எடுத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து செந்தில்குமார் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
45 வயதாகும் செந்தில்குமார் வெள்ளகோவில் தபால் நிலையத்தில் தபால்காரராக 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருவது விசாரணையில் தெரிய வந்தது.
அவர் ஏன் ஆயிரக்கணக்கான தபால்களை விநியோகம் செய்யாமல் இருந்தார் என்னும் மர்மம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

