இந்தியப் பொருளியல் வளர்ச்சி குறித்து அமெரிக்க அதிபர் பாராட்டு

இந்தியப் பொருளியல் வளர்ச்சி குறித்து அமெரிக்க அதிபர் பாராட்டு

ஏஎப்பி

22 Nov 2026 - 7:07 pm

2 mins read

இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி ஏழு விழுக்காட்டுக்கும் அதிகமாக நீடிப்பதாகவும் அமெரிக்காவின் வளர்ச்சியை உறுதிசெய்ய இந்தியாவின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-23ஆம் நிதியாண்டு முதல் 2024-25ஆம் நிதியாண்டு வரை இந்தியாவின் சராசரி பொருளியல் வளர்ச்சி 7.2 முதல் 7.3 விழுக்காடாக இருந்த நிலையில், 2025-26ஆம் நிதியாண்டில் 7.6 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது. இதே காலகட்டத்தில் சீனா 4.5 விழுக்காடும் அமெரிக்கா 2.3 விழுக்காடும் ஐரோப்பிய நாடுகள் ஒரு விழுக்காடும் வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாக அனைத்துலக நிதி அமைப்புகள் கணித்துள்ளன.

இதனிடையே, அமெரிக்காவில் பணவீக்கம் 3.6 விழுக்காடாக உயர்ந்துள்ளதால் அதனை இரண்டு விழுக்காட்டுக்கும் கீழ் குறைக்க அந்த நாட்டின் மத்திய வங்கி கடந்த செப்டம்பரில் 0.25 விழுக்காடு வட்டி விகிதத்தை உயர்த்தியதுடன் டிசம்பரிலும் 0.5 விழுக்காடு உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், மத்திய வங்கித் தலைவர் கெவின் வார்ஷின் நடவடிக்கையை விமர்சித்தார்.

இந்தியாவைப் போன்று வட்டி விகிதத்தைக் குறைத்துப் பொருளியல் கொள்கைகளைப் பின்பற்றினால் அமெரிக்கா 14 முதல் 20 விழுக்காடு வரை வளர்ச்சியடைந்து அனைத்துலகக் கடன் சுமைகளை விரைவாக அடைக்க முடியும் என அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

கடந்த 2025ஆம் ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வரி விதித்த அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதாகக் குற்றஞ்சாட்டி இந்தியப் பொருள்களுக்கு 50 விழுக்காடு வரை வரி விதித்தார். முன்னர் இந்தியப் பொருளியலைக் கடுமையாக விமர்சித்த அவர், இப்போது பாராட்டியிருப்பது அனைத்துலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னதாக, அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த இந்தியாவின் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்தியப் பொருளியல் பேரழிவின் விளிம்பில் உள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். அதற்குப் பதிலளித்த பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் ஆஷிஷ் சூட், உலகமே இந்தியாவின் பொருளியல் வலிமையை அங்கீகரிக்கும் நிலையில் ராகுல் காந்தி உண்மையை மறுப்பதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்