சென்னை: இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. புதன்கிழமை (ஜனவரி 22) காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்து 200க்கு (943.25 சிங்கப்பூர் வெள்ளி) விற்கப்படுகிறது.
அனைத்துலகப் பொருளியல் நிலைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்படும்.
அதன்படி, புதன்கிழமை காலை, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 7,525 ரூபாய்க்கும் பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.60,200க்கும் விற்கப்படுகிறது. ஜனவரி 21ஆம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.59,600க்கு விற்பனையான நிலையில் ஜனவரி 22ஆம் தேதி பவுன் ரூ.60 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தங்க நகை வாங்க விரும்பும் பொதுமக்கள் மத்தியில் இந்த விலையுயர்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை அந்நாட்டு ரூபாயின் மதிப்பு சற்று ஏற்றம் கண்டுள்ளதும் பண்டிகை காலம், திருமணம் ஆகியனவற்றால் தேவை அதிகரித்துள்ளதாலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டது.
அனைத்துலகளவில் பார்க்கும்போது, அண்மையில் அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் பதவியேற்றதும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அதில் ஒன்று இறக்குமதி வரி விதிப்பு. அண்டை நாடுகளுக்கு இறக்குமதி வரியை அதிகரித்ததோடு மட்டுமல்லாது இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கும் 100 விழுக்காடு வரி விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் முதலீட்டார்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதி அதன் மீதான முதலீட்டை அதிகரித்து வருவதால் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
அனைத்துலகப் பொருளியல் மந்தநிலை, போர்ப் பதற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் நீண்டகால அடிப்படையில் பார்க்கும் போது அடுத்த இரண்டு ஆண்டுகளில் தங்கம் விலை பல மடங்கு உயரும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.