தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவுக்கு மின்சக்தி விநியோகம்: சூரியசக்தி ஒப்பந்தத்தைப் பெற்ற செம்ப்கார்ப்

1 mins read
c914926d-921c-4014-a047-24f6cd0d3fd9
செம்ப்கார்ப் குழுமம். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

செம்ப்கார்ப் குழுமத்துக்கு முழுமையாகச் சொந்தமான செம்ப்கார்ப் கிரீன் இன்ஃபிரா நிறுவனம், இந்தியாவில் சூரியசக்தி மூலம் மின்சக்தி உற்பத்தி செய்து விநியோகிக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தமான எஸ்ஜேவிஎன் எரிசக்தி நிறுவனம், செம்ப்கார்ப் கிரீன் இன்ஃபிரா நிறுவனத்திடம் இத்திட்டத்தை ஒப்படைத்துள்ளது. அதன்கீழ், செம்ப்கார்ப் கிரீன் இன்ஃபிரா தினமும் நான்கு மணிநேரம் சூரியசக்தி மூலம் உருவாகும் மின்சக்தியை விநியோகிக்கும்.

பெஸ் எனப்படும் 300 மெகாவாட்-அவர் மின்கல எரிசக்தி சேகரிப்பு முறையின் மூலம் அவ்வாறு சூரியசக்தி மூலம் உருவாகும் மின்சக்தி விநியோகிக்கப்படும். கட்டுமானத் திட்டம் நிறைவடைந்ததும் அவ்வாறு மின்சக்தி விநியோகிக்கப்படும் என்று செம்ப்கார்ப் குழுமம் வியாழக்கிழமை (மே 29) தெரிவித்தது.

எஸ்ஜேவிஎன் நிறுவனத்துடன், 25 ஆண்டுகளுக்கான மின்சக்தி வாங்கும் ஒப்பந்தம் (பிபிஏ) செயல்படுத்தப்படுவதைப் பொறுத்து இந்த மின்சக்தி விநியோகம் இடம்பெறும் என்று செம்ப்கார்ப் சொன்னது. பிபிஏ ஒப்பந்தம் கையெழுத்தாகி 24 மாதங்களுக்குள் திட்டத்தைச் செயல்படுத்தும் பணிகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குழுமம் குறிப்பிட்டது.

தங்களிடம் ஏற்கெனவே இருக்கும் நிதியுடன் சேர்ந்து கடன் பெற்று திட்டத்துக்குச் செலவிடப்படும் என்று செம்ப்கார்ப் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்