மும்பை: ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்தபோது, அதே ரயிலில் பயணம் செய்த இளையர் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். இது தொடர்பான காணொளி பலரால் பகிரப்பட்டு வருகிறது.
குழந்தை பெற்றெடுத்த அந்தப் பெண், மும்பை புறநகர்ப் பகுதியில் வசிக்கிறார். சம்பவத்தன்று அவர் மும்பையிலிருந்து ரயிலில் தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அந்த இரவு நேரத்தில் அவருக்குத் திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த சக பயணிகளில் ஒருவர், ரயிலின் அபாயச் சங்கிலியை இழுத்து அதை நிறுத்தினார்.
ராம் மந்திர் என்ற ரயில் நிலையத்தில் ரயில் நின்ற பிறகே அங்கு மருத்துவர்களோ மருத்துவ வசதிகளோ இல்லை எனத் தெரியவந்தது. குறைந்தபட்சம், ‘ஆம்புலன்ஸ்’ வாகனத்தைக்கூட ஏற்பாடு செய்ய முடியாத நிலை.
அப்போது, திலீப் என்ற மேற்குறிப்பிட்ட அந்த இளையர், கைப்பேசி மூலம் தேவிகா தேஷ்முக் என்ற மருத்துவரைக் காணொளிவழி தொடர்புகொண்டார்.
பின்னர் மருத்துவரின் வழிகாட்டுதலுடன் வலியில் துடித்த அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தார். சில நிமிடங்களில் அந்தப் பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, தாயும் சேயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இருவரும் நலமாக இருப்பதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இளையர் திலீப்புக்கு மும்பைவாசிகள் சமூக ஊடகங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.