புதுடெல்லி: டெல்லி காவல்துறையின் அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட முடியாது என அகில இந்திய மாணவர் சங்கத்தின் தேசியத் தலைவரான நேஹா போரா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஜனநாயகப்பூர்வமான எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கும் முயற்சியாகவே இந்த உத்தரவு அமைந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களின்போது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகக் கூறி, நேஹா போரா 10,000 ரூபாய் பிணைத் தொகையுடன் கூடிய அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் எனச் சிறப்பு நிர்வாக நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இருப்பினும், உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சனிக்கிழமை (அக்டோபர் 24) செய்தியாளர்களைச் சந்தித்த நேஹா போரா, “அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திடுவது என்பது நமது ஜனநாயக உரிமைகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் ஒப்படைப்பதற்குச் சமம்,” என்று தெரிவித்தார்.
காவல்துறை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நாங்கள் போராட்டம் நடத்தியதாகக் கூறி அமைதி மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் போராட்டத்திற்கு மாணவர் அமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை. அமைதியான முறையில் திரண்ட எங்களை காவல்துறை வலுக்கட்டாயமாகக் கைது செய்தது,” என்று நேஹா போரா விளக்கமளித்தார்.
மக்களாட்சியில் அரசைக் கேள்வி கேட்பதும் வாக்காளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதும் அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்று சுட்டிக்காட்டிய அவர், அதிகாரத்தில் உள்ளவர்களை நோக்கி கேள்வி எழுப்புவது எப்படிப் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் என்று கேட்டார்.
எந்தச் சூழ்நிலையிலும் பிணைப்பத்திரத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்றும் மாணவர்களின் ஜனநாயகப் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்டோபர் 29ஆம் தேதி நடைபெறும் எனச் சிறப்பு நிர்வாக நடுவர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மாணவர் சமூகத்தின் குரலை ஒடுக்க முடியாது எனவும் சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம் எனவும் மாணவர் சங்க அமைப்பினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
