இஸ்ரேலியப் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

இஸ்ரேலியப் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

2 mins read
6e24e900-dac1-42ce-91b6-ac389cbf7b4e
(இடது) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் தாக்குதல் குறித்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூவிடம் தொலைபேசியில் உரையாடினார். - படம்: இபிஏ

புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வன்முறையை முன்கூட்டியே நிறுத்தும்படி இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூவிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு வட்டாரங்களில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் திரு நெட்டன்யாஹூவிடம் தொலைபேசியில் உரையாடியதாகத் திரு மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

“வட்டாரத்தில் நிலவும் தற்போதைய நிலை குறித்து திரு நெட்டன்யாஹுவிடம் பேசினேன். அண்மையில் நடப்பவை குறித்த இந்தியாவின் கவலையை அவரிடம் தெரிவித்தேன். குடிமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும்படி கூறினேன். வன்முறையை விரைவில் நிறுத்தும்படி வலியுறுத்தினேன்,” என்றார் திரு மோடி.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) திரு மோடியின் தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்த அமைச்சரவைக் குழு நாட்டில் பாதுகாப்பு, உத்திபூர்வ விவகாரங்கள் குறித்து முடிவெடுக்கும்.

ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்த தாக்குதல்கள் குறித்து கூட்டத்தில் பேசப்பட்டன. அத்துடன் வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்திய நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது என்று தகவல் அறிந்த வட்டாரம் தெரிவித்தது. குறிப்பாக, அங்குச் சிக்கியிருப்போரை எப்படி மீட்பது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அதிகபட்சமாக அடுத்த ஒரு மாதத்துக்கு ஈரான்மீதான தாக்குதல் தொடரும் என்று கூறியதாக ‘த டெய்லி மெயில்’ சொன்னது.

பூசலால் பாதிக்கப்பட்ட அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் வேண்டிய உதவிகளை செய்யும்படி உரிய அமைப்புகளுக்கு அமைச்சரவைக் குழு உத்தரவிட்டுள்ளது.
பூசலால் பாதிக்கப்பட்ட அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் வேண்டிய உதவிகளை செய்யும்படி உரிய அமைப்புகளுக்கு அமைச்சரவைக் குழு உத்தரவிட்டுள்ளது. - படம்: டெக்கன் ஹெரல்ட்

மத்தியக் கிழக்கு நாடுகளின் விமான நிலையங்கள் முழுமையாகச் செயல்பாட்டை நிறுத்திக்கொண்டதால் துபாய், டோஹா போன்ற பல முக்கிய பகுதிகளில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான இந்தியர்கள், இந்திய அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளனர்.

ஈரானில் கிட்டத்தட்ட 10,000 இந்தியர்கள் வாழ்கின்றனர், கல்விக் கற்கின்றனர், பணியாற்றுகின்றனர். இஸ்ரேலில் ஏறக்குறைய 40,000 இந்தியர்கள் உள்ளனர். பூசல் நீடித்தால் அத்தகையோரின் பாதுகாப்பை எப்படி வலுப்படுத்துவது என்பது குறித்தும் அமைச்சரவைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

துபாய் விமான நிலையத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான இந்திய நாட்டவர் சிக்கியுள்ளனர்.
துபாய் விமான நிலையத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான இந்திய நாட்டவர் சிக்கியுள்ளனர். - படம்: த இந்து

ஒட்டுமொத்தமாக, மத்தியக் கிழக்கு நாடுகளில் 9 மில்லியனுக்கும் அதிகமான இந்திய மக்கள் வாழ்ந்துவருவதைக் குழு சுட்டியது.

இந்நிலையில், பூசலால் பாதிக்கப்பட்ட அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் வேண்டிய உதவிகளை செய்யும்படி உரிய அமைப்புகளுக்கு அமைச்சரவைக் குழு உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்