பிரதமர் மோடியின் ஐரோப்பியப் பயணம்

பிரதமர் மோடியின் ஐரோப்பியப் பயணம்

படம்: இபிஏ

16 May 2026 - 7:16 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவின் பொருளியலை மேம்படுத்தவும் ஐரோப்பிய நாடுகளுடனான உத்திபூர்வப் பங்காளித்துவத்தை வலுப்படுத்தவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகள் அடங்கிய அதிகாரபூர்வப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கையெழுத்திடப்பட்ட இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், 2025ஆம் ஆண்டில் கையெழுத்தான ‘பொருளியல் பங்காளித்துவ ஒப்பந்தம் ஆகியவற்றின் பின்னணியில் பிரதமர் மோடியின் இந்த முக்கியப் பயணம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தமது பயணத்தின் இரண்டாம் கட்டமாக வெள்ளிக்கிழமையன்று (மே 15) நெதர்லாந்து சென்றடைந்தார். 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு நெதர்லாந்து நாட்டுக்கு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.

நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். நெதர்லாந்து அரசர் வில்லியம் அலெக்சாண்டர், அரசியார் மாக்சிமா ஆகியோரையும் பிரதமர் மோடி சந்திக்க இருக்கிறார்.

நெதர்லாந்தின் த ஹேக் நகரில் வாழும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்றும் நெதர்லாந்து நிறுவனங்களின் முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

நெதர்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு மே 17 ஆம் தேதியன்று சுவீடனின் கோதன்பர்க் நகருக்குப் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு சுவீடனுக்கு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.

2018ல் தொடங்கப்பட்ட ‘இந்தியா-சுவீடன் புத்தாக்கப் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், பசுமை மாற்றம், செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது இதன் நோக்கமாகும்.

இதனைத் தொடர்ந்து, மே 18ஆம் தேதியன்று நார்வேக்குச் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டுப் பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரேவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார்.

மே 19ஆம் தேதியன்று நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெறும் மூன்றாவது இந்தியா-நார்டிக் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

பிரதமர் மோடியின் ஐரோப்பியப் பயணத்தின் இறுதிக்கட்டமாக மே 19, 20ஆம் தேதிகளில் இத்தாலியத் தலைநகர் ரோம் நகருக்கு அதிகாரபூர்வப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இத்தாலிக்குச் செல்வது இது மூன்றாவது முறையாக இருந்தாலும், அந்நாட்டிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் சிறப்பு இருதரப்பு பயணம் இதுவாகும்.

குறிப்புச் சொற்கள்