புதுடெல்லி: அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் நான்கு நாள்கள் பயணம் மேற்கொண்டு குடும்பத்துடன் திங்கட்கிழமை இந்தியா வந்து சேர்ந்தார்.
டெல்லி வந்தடைந்த அவருக்கு மத்திய அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், அன்று மாலை அவர் பிரதமர் மோடியை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது ஜே.டி.வான்ஸ் அவரது மனைவியான இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா வான்ஸ், குழந்தைகள் இவான், விவேக், மிராபெல் ஆகியோரும் உடன் இருந்தனர்.
பிரதமர் மோடியும், ஜே.டி. வான்சும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ஜே.டி.வான்சின் குழந்தைகள் பிரதமர் மோடி அருகே சென்று அவரின் மடியில் அமர்ந்துகொண்டனர்.
இதையடுத்து, குழந்தைகளுக்கு பிரதமர் மோடி மயில் இறகுகளை பரிசாக அளித்தார். அதை குழந்தைகள் பெற்றுக்கொண்டனர்.
இது தொடர்பான காணொளி தற்போது ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
முன்னதாக திங்கட்கிழமை அன்று டெல்லியில் உள்ள சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் கோவிலுக்கு ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த நிலையில், இந்திய பயணத்தின் 2வது நாளான செவ்வாய்க் கிழமை அன்று ஜே.டி.வான்ஸ் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சென்றார்.
அங்கு, யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கும் ஆம்பர் கோட்டையை ஜே.டி.வான்ஸ் குடும்பத்துடன் பார்வையிட்டார். மேலும், அங்கு நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளையும் அவர் குடும்பத்துடன் கண்டுகளித்தார்.
ஜெய்ப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு ஜே.டி.வான்ஸ் புதன்கிழமை ஆக்ரா செல்கிறார்.

