ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் ஒரு சிற்றூரில் வசிக்கும் மக்கள், தங்களுடைய பிள்ளைகளை அரசாங்கப் பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
நிர்மல் மாவட்டத்தில், லட்சுமண் சந்தா என்னும் சிற்றூர் உள்ளது. அந்தச் சிற்றூர் மக்கள், அண்மையில் ஒன்றுதிரண்டு, தங்களின் பிள்ளைகளின் வருங்காலம் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.
அந்தச் சிற்றூரில் வசிப்போர் பெரும்பாலும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் அனைவருடைய பிள்ளைகளையும் தனியார் பள்ளிக்கு அனுப்புவதைக் காட்டிலும் சிறந்த வசதிகளைக் கொண்ட அரசாங்கம் நடத்தும் பள்ளிகளிலேயே சேர்த்துப் படிக்கவைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
அரசுப் பள்ளிகளில்தான் நன்கு படித்த, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், பிள்ளைகள் விளையாடுவதற்கு நல்ல விளையாட்டுத்தளம், அறிவியல் சோதனைக் கூடம் என பல்வேறு வசதிகள் உள்ளன. எனவே தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முடிவு செய்ததாக அப்பகுதியின் ஊராட்சி மன்றத் தலைவி படிகலா லட்சுமி தெரிவித்துள்ளார்.

