சிறைத்துறை செயல்பாடு: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்

2 mins read
8d496392-c8d8-45ee-97ef-c2c0fa240b2a
கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் தரவுகளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. - சித்திரிப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் நீதி வழங்குவதிலும் சிறைத்துறை சார்ந்த நடவடிக்கைகளிலும் தென்மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் முதல் 5 இடங்களையும் தென் மாநிலங்களே பிடித்துள்ளன.

காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை, சட்ட உதவிகள் ஆகிய நான்கு துறைகள் மூலம் பொதுமக்களுக்கு எவ்வாறு நீதி வழங்கப்படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்திய மாநிலங்களின் செயல்பாடுகள் மதிப்பிடப்பட்டன. இதன் மூலம் இந்திய நீதி என ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

மும்பையில் உள்ள தனியார் அறக்கட்டளை இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் தரவுகளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில், ‘இந்திய நீதி அறிக்கை 2025’ தரநிலை தற்போது வெளியாகி உள்ளது. இதில், முதல் 6 இடங்களைப் பெற்றுள்ள மாநிலங்கள் சிறப்பானவை என்றும் அடுத்த 6 இடங்களைப் பெற்ற மாநிலங்கள் சுமாரானவை என்றும் கடைசி 6 இடங்களைப் பெற்ற மாநிலங்கள் மோசமானவை என்றும் மதிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் கர்நாடகா 10க்கு 6.78 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது.

ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு, சட்டீஸ்கர் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

பீகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகியவை மோசமான மாநிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளையில், காவல் துறையில் கா்நாடகா மூன்றாம் இடத்திலும் தெலுங்கானா முதலிடத்திலும், தமிழகம் 13ஆம் இடத்திலும் உள்ளன.

சிறைத்துறையில் தமிழகம் முதலிடத்திலும் கா்நாடகா இரண்டாம் இடத்திலும் கேரளம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

குறிப்புச் சொற்கள்