புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தைத் (இஸ்ரோ) தனியார்மயமாக்கும் முயற்சி எந்த அளவிற்கு மேற்கொள்ளப்படும் என்பது குறித்துத் தெளிவான பதில்களைக் கோரி, அதன் தலைவர் டாக்டர் வி. நாராயணனுக்கு முக்கிய ஊழியர் சங்கங்கள் கடிதம் எழுதியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) புவிக்கண்காணிப்புச் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சில மணி நேரங்களிலேயே இக்கடிதம் அனுப்பப்பட்டது. அச்சாதனை மகிழ்ச்சியளித்தாலும் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு குறித்த அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இஸ்ரோவின் மொத்த ஊழியர்களில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமான, அதாவது கிட்டத்தட்ட 5,000 ஊழியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒன்பது முக்கிய ஊழியர் சங்கங்கள் அக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இஸ்ரோவின் முதன்மையான பொறியியல், உற்பத்திப் பிரிவுகளை அரசு படிப்படியாக மூடிவிடுமா என்பது குறித்து எழுத்துவழி விளக்கம் அளிக்கும்படி அவர்கள் கோரியுள்ளனர்.
உந்துகணைகளையும் வழக்கமான செயற்கைக்கோள்களையும் தயாரிப்பதை இஸ்ரோ படிப்படியாக நிறுத்திவிடும் என்றும் அவற்றை இனித் தனியார் நிறுவனங்களே தயாரிக்கும் என்றும் விண்வெளி ஒழுங்குமுறை அமைப்பான ‘இன்-ஸ்பேஸ்’ தலைவர் பவன் கோயங்கா அண்மையில் கூறிய கருத்துகளே அவர்களின் அச்சத்திற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
சிறிய உந்துகணைத் தொழில்நுட்பங்களை அரசு ஏற்கெனவே தனியார் நிறுவனங்களுக்கு மாற்றியுள்ள நிலையில், உந்துகணைத் தயாரிப்பு என்பது எளிமையான ஒருங்கிணைப்புப் பணியன்று என ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதற்குப் பல்லாண்டுகால அனுபவமும் சிறப்புத் திறன்களும் தேவைப்படும் என்பதால் அதனை எளிதில் நகலெடுக்க முடியாது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
தனியார் நிறுவனங்கள் விண்வெளித் துறையில் நுழைவதை தங்களது சங்கங்கள் எதிர்க்கவில்லை என்றும் அதே வேளையில் இஸ்ரோவின் சொந்தத் திறன்களை அழித்துவிடாமல் ஒரு தெளிவான எல்லையை வரையறுக்க வேண்டும் என்றும் ஊழியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதுகுறித்த தெளிவான திட்டம் இல்லாவிட்டால் தங்களுக்குக் குறைந்த பணிகளும் குறைந்த பதவியுயர்வு வாய்ப்புகளுமே கிடைக்கும் என்றும் இளம்பட்டதாரிகள் மதிப்புமிக்க அரசுப் பணியைத் தொடரும் வாய்ப்பை இழப்பார்கள் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ‘நாசா’ போன்று முழுமையாகத் தனியார் நிறுவனங்களை மட்டுமே சார்ந்து இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.


