தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வகுப்பறையில் மாணவரைத் திருமணம் செய்துகொண்ட பேராசிரியை

2 mins read
02255472-fb47-4a81-ba2b-206f9adfe685
மணப்பெண் உடையணிந்து காணப்படும் பேராசிரியை, கல்லூரியில் படித்து வரும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரை இந்து முறைப்படி பல்வேறு சடங்குகளுடன் திருமணம் செய்து கொள்ளும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.  - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் படித்து வரும் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவரைப் பேராசிரியை ஒருவர் திருமணம் செய்துகொள்ளும் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இம்மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள மௌலானா அப்துல் கலாம் ஆசாத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வகுப்பறையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், திருமணம் ஒரு நாடக நிகழ்வுக்காக நடத்தப்பட்டதாக பேராசிரியை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பரவி வரும் காணொளியில் மணப்பெண் உடையணிந்து காணப்படும் பேராசிரியை, முதலாம் ஆண்டு படிக்கும் மாணவரை இந்து வங்காள முறைப்படி பல்வேறு சடங்குகளுடன் திருமணம் செய்து கொள்கிறார்.

குங்குமம் வைப்பது, மாலை மாற்றுவது உள்ளிட்ட சடங்குகளுடன் காணொளி வெளிவந்ததைக் கண்டு பெரும் சர்ச்சை கிளம்பியது.

இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு மூன்று பேராசிரியைகளைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தபஸ் சக்ரவர்த்தி கூறுகையில், “திருமணத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியை ஒழுக்கக்கேடான விசயம் எதிலும் ஈடுபடவில்லை.

“மாணவர்களுக்கான பாடத்தின் ஒரு பகுதியாக திருமணம் நடப்பது போல் நாடகம் நடத்தப்பட்டதாக சம்பந்தப்பட்ட பேராசிரியை விளக்கமளித்துள்ளார்.

“எனினும், காணொளி சர்ச்சையைத் தொடர்ந்து, விசாரணை முடியும் வரை பணிக்கு வர வேண்டாம் எனக் கூறி பெண் பேராசிரியரை விடுமுறை எடுத்துக் கொள்ளும்படி கூறியிருக்கிறோம்.

“சம்பந்தப்பட்ட மாணவரையும் இப்போதைக்கு வகுப்புக்கு வரவேண்டாம் எனக் கூறியிருக்கிறோம். எனினும் சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்து தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்