புதுடெல்லி: இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை, அவருக்கு எதிரான போராட்டம் தொடரும் என கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் (சிஜேபி) தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.
அண்மையில், நீட் தேர்வு, சிபிஎஸ்இ தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என சிஜேபி வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில், அமைச்சருக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்காவில் இருந்து நாடுதிரும்பிய அபிஜீத் தீப்கே, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) செய்தியாளர்களிடம் பேசியபோது, அமைச்சர் பதவி விலகாவிட்டால் அடுத்து நாடுதழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என்றார்.
திரு தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை பின்வாங்கப் போவதில்லை என்றும் அதற்கான திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்றும் குறிப்பிட்ட அவர், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற போராட்டம் வெற்றி பெற்றதாகத் தெரிவித்தார்.
இதனிடையே, டெல்லியில் உள்ள அபிஜீத் தீப்கே வீட்டுக்கு காவல்துறை கூடுதல் பாதுகாப்பு வழங்கியுள்ளது. தற்போது 15 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக டெல்லி காவல்துறை கூறியது.
அண்மையில், இளையர்கள் குறித்து இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, சமூக ஊடகத்தில் கரப்பான்பூச்சி மக்கள் இயக்கத்துக்கு தனிக் கணக்கு தொடங்கிய அபிஜீத், பின்னர் அதை அரசியல் கட்சியாகப் பதிவு செய்தார்.

