ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

படம்: பிடிஐ

07 Oct 2026 - 10:20 pm

1 mins read

புதுடெல்லி: தேர்தல், வாக்காளர் பதிவேடுகள் தொடர்பான முறைகேடுகளை முன்வைத்து, இந்திய இளையரைத் திரட்டி அக்டோபர் 10ஆம் தேதி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் திட்டமிட்டுள்ளது.

அந்த ஆர்ப்பாட்டம் குறித்துப் புதுடெல்லிக் காவல்துறையிடம் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமைப் பேச்சாளர் சௌரவ் தாஸ் புதன்கிழமை (அக்டோபர் 7) தெரிவித்தார்.

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய திரு தாஸ், “நாங்கள் பார்லிமெண்ட் ஸ்திரீட் காவல் நிலைய அதிகாரிகளிடம் போராட்டம் குறித்த அதிகாரபூர்வக் கடிதத்தைக் கொடுத்துள்ளோம்.

“கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் பேரளவிலான இந்திய இளையரும் அக்டோபர் 10ஆம் தேதி ஜந்தர் மந்தரில் கூடவுள்ளதை அவர்களிடம் முறைப்படி தெரிவித்தோம்.

“சட்ட ஒழுங்கைப் பராமரிக்கவும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்யவும் கேட்டுக்கொண்டுள்ளோம்.

“இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை நாங்கள் வழங்கியுள்ளோம்,” என்றார்.

புதுடெல்லிக் காவல்துறை இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஒப்புக்கொண்டு கடிதத்தின் நகலை வழங்கியதாக அவர் கூறினார்.

வாக்குத் திருட்டு, தேர்தல் முடக்கம் தொடர்பாக இளையரிடையே நிலவும் அக்கறைகளை மையமாகக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் அமையும் என்று திரு தாஸ் விளக்கினார்.

அந்தப் பிரச்சினை குடிமக்கள் அனைவரையும் சார்ந்தது என அவர் குறிப்பிட்டார். திட்டமிடப்பட்டுள்ள அந்த ஆர்ப்பாட்டம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு மட்டுமே உரியதன்று என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவிவிலகும் வரை தெருக்களில் இறங்கிப் போராடுவதை நிறுத்தப்போவதில்லை என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்