அமராவதி: அமராவதி பசுமைப் பரப்பு திட்டத்துக்காக நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 குத்தகை வழங்கப்படும் என்று ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை (ஏப்ரல் 18) அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதியை உலகத்தரம் வாய்ந்த நவீன நகரமாக உருவாக்குவதற்காக அரசாங்கம் மக்களிடமிருந்து நிலங்களை வாங்கி வருகிறது.
அமராவதி நில ஒருங்கிணைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தங்களது நிலங்களை வழங்கிய விவசாயிகளுக்கு குத்தகைத் தொகை வழங்கப்பட உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் ஏக்கர் நிலத்துக்கு ரூ. 40,000 குத்தகைத் தொகையாக பத்தாண்டுகளுக்கு வழங்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
குத்தகைத் தொகையை ஆண்டுக்கு ரூ. 3,000 உயர்த்துவதாக உறுதியளித்ததோடு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1.5 லட்சம் பயிர்க் கடன் வழங்கவும் அவர் உறுதியளித்துள்ளார்.
மொத்தம் 31,150 விவசாயிகள் கிட்டத்தட்ட 34,983 ஏக்கர் நிலத்தை வழங்கியதாக ஏப்ரல் 10ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.
பசுமைப் பரப்புகளை உருவாக்க விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நிலங்கள் உள்பட, அமராவதியில் ஏற்கெனவே 54,000 ஏக்கர் நிலத்தை ஆந்திர அரசு ஒருங்கிணைத்துள்ளது.
மேலும், அமராவதியைச் சுற்றி சாலைகள், ரயில் நிலையம், ரயில் பாதைகள், அனைத்துலக விளையாட்டு நகரம் போன்றவற்றை உருவாக்க கூடுதல் நில ஒருங்கிணைப்பு தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

