விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி62; 3வது கட்டத்தில் தடுமாற்றம்

2 mins read
1b5be0d1-fa63-4cb7-8bf7-9f76d5a532a7
பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதாக இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். - படம்: இஸ்ரோ யூடியூப்

புதுடெல்லி: இந்தியாவின் பிஎஸ்எல்வி. சி-62 ஏவுகணை 16 செயற்கைக் கோள்களைச் சுமந்து கொண்டு விண்ணில் சீறிப் பாய்ந்தது. ஆனால், மூன்றாவது கட்டத்தில் பாதையிலிருந்து ஏவுகணை சற்று விலகிச் சென்றதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

பிஎஸ்எல்வி. சி-62 ஏவுகணை ஏவுவதற்கான இறுதிக்கட்டப்பணி ஞாயிறு (ஜனவரி 11) காலை தொடங்கியது.

இதையடுத்து ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து திங்கட்கிழமை காலை (ஜனவரி 12) பிஎஸ்எல்வி. சி-62 ஏவுகணை 10.17 மணிக்கு விண்வெளியை நோக்கிப் பாய்ச்சப்பட்டது.

இது, புத்தாண்டு பிறந்து இஸ்ரோ ஏவியிருக்கும் முதல் ஏவுகணையாகும். இதில், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) சேவைக்காக இஓஎஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைத்து பொருத்தப்பட்டுள்ளது.

முதன்மை செயற்கைக்கோளான இதனுடன் ஸ்பெயின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்' என்ற ஒரு சிறிய சோதனைக் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், சிங்கப்பூர், ஐரோப்பா, அமெரிக்கா முழுவதும் உள்ள நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களின் 16 செயற்கைக்கோள்களும் இதனுடன் விண்ணுக்கு ஏவப்பட்டன.

இதற்கிடையே, ஏவுகணையின் மூன்றாவது கட்டத்தில் ஒழுங்கற்ற முறையில் செயல்பட்டதை இஸ்ரோ அதிகாரிகள் கவனித்துள்ளனர்.

ராக்கெட்டின் மூன்றாவது நிலையின் இறுதியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அது வழி மாறியது. அதன் காரணமாக செயற்கைக்கோள்கள் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் முழுமையாக நிலைநிறுத்தப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செயற்கைக்கோள்களும் செயல் இழக்கப்பட்டிருக்கலாம் என்ற கூறப்படுகிறது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,“ராக்கெட்டின் இயக்கத்தில் ஏற்பட்ட சீர்கேடு தொடர்பான அனைத்து தரவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. முழுமையான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இஸ்ரோ தலைவர் நாராயணனும் அறிவியல் அறிஞர்களும் வெள்ளிக்கிழமை காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களைத் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் வரவேற்று தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

சி-62 ஏவுகணை மாதிரியை மூலவர் ஏழுமலையான் காலடியில் வைத்து அர்ச்சகர்கள் சிறப்புப் பூஜைகள் செய்தனர்.

குறிப்புச் சொற்கள்