புதுடெல்லி: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் டெல்லி அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மருத்துவக் கண்காணிப்பின்கீழ் இருக்கும் அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக திரு பகவந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆயினும், அவர் பரிசோதனைகள் முடிந்து வீடு திரும்பிவிட்டாரா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
அத்துடன், முதல்வரின் உடல்நிலை குறித்து பஞ்சாப் அரசாங்கமோ அவர் சார்ந்த ஆம் ஆத்மி கட்சியோ இதுவரை அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.
இதனிடையே, டெல்லியிலிருந்து சண்டிகர் சென்றபோது விமானத்தில் முதல்வர் பகவந்த் மது அருந்தியதாகவும் விமானத்தைவிட்டு இறங்கியதும் ஓடுபாதையில் தள்ளாடி விழுந்ததாகவும் சிரோன்மணி அகாலி தளக் கட்சியின் தலைவர் பிக்ரம் சிங் மஜிதியா குற்றம் சாட்டியுள்ளார்.
அதன் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதனையடுத்து, முதல்வர் மீண்டும் விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதனால் அரசாங்கப் பணம் வீணடிக்கப்பட்டதாகவும் திரு மஜிதியா சாடினார்.
மேலும், ஆம் ஆத்மி கட்சி ஆட்சியிலுள்ள பஞ்சாப்பிலும் டெல்லியிலும்தான் அரசு மருத்துவமனைகள் சிறப்பாகச் செயல்படுவதாகக் கூறப்படுவதையும் எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
“ஆயினும், தமது சொந்த உடல்நலன் என வரும்போது, முதல்வர் பகவந்த் டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையைத் தெரிவுசெய்துள்ளார். இந்தப் போலித்தனம் திகைக்க வைக்கிறது,” என்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா சாடியுள்ளார்.