புதுடெல்லி: பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் உற்பத்தியாகும் பயிர்க் கழிவுகளில் 40 விழுக்காட்டைத் தொழில்துறைப் பயன்பாடு உள்ளிட்ட வெளிப்புற நிர்வாகத்திற்குப் பயன்படுத்த அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த இலக்கு அடுத்த ஆண்டு 60 விழுக்காடாக உயர்த்தப்படும்.
டெல்லி-தேசியத் தலைநகர் வட்டாரத்தில் காற்றுத் தூய்மைக்கேட்டைக் குறைக்கவும் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
காற்றுத் தர மேலாண்மை ஆணையத் தகவலின்படி, பஞ்சாபில் 7.9 மில்லியன் டன் பயிர்க் கழிவுகள் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது; இதில் ஏறக்குறைய 4.5 மில்லியன் டன் கழிவுகள் வெளிப்புறமாக நிர்வகிக்கப்படும்.
அனல் மின் நிலையங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ள 5 விழுக்காட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தக் கழிவுகள் பயன்படுத்தப்படும்; எஞ்சியுள்ளவை செங்கல் சூளைகள், அழுத்தப்பட்ட உயிர்எரிவாயு ஆலைகள் முதலியவற்றில் பயன்படுத்தப்படும்.
ஹரியானாவில் 2.7 மில்லியன் டன் பயிர்க் கழிவுகள் வெளிப்புறமாக நிர்வகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றுத் தூய்மைக்கேட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதுடெல்லியில் உள்ள பவன்-ஐ3சி எனும் ஒருங்கிணைந்த மின்னிலக்கத் தளத்தை மத்திய சுற்றுப்புற, வன, பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முப்பதுக்கும் மேற்பட்ட தகவல் பகிர்வுத் தளங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்நிலையம், காற்றுத் தரம், உமிழ்வுகள், செயற்கைக்கோள் தரவுகள், வானிலை விவரங்கள் ஆகியவற்றை உடனுக்குடன் பெற்றுக் கண்காணிக்க வழிவகுக்கிறது.
டெல்லி-தேசியத் தலைநகர் வட்டாரத்தில் உள்ள 111 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள், 2,300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், 3,200க்கும் அதிகமான கட்டுமானத் தளங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை இத்தளம் ஒருங்கிணைக்கிறது.
‘கண்டறிதல், பகுப்பாய்வு செய்தல், நடவடிக்கை எடுத்தல்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இத்தளம் செயல்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சுற்றுப்புற விதிமுறைகளை மீறும் தொழிற்சாலைகள், தூய்மைக்கேட்டை உண்டாக்கும் வளங்கள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகள்மீது தாமதமின்றி உடனடி நடவடிக்கைகள் எடுக்க இது பேருதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
