புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் வரும் டிசம்பர் மாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதை ரஷ்ய அதிபர் மாளிகை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியத் தயாரிப்புகளுக்கு அமெரிக்கா 50 விழுக்காடு வர்த்தக வரி விதித்ததைத் தொடர்ந்து, புதுடெல்லியும் மாஸ்கோவும் நெருங்கி வரும் நிலையில் இந்தியாவின் பிடிஐ செய்தி நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.
‘எஸ்சிஓ’ எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் தியான்ஜினில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் திரு புட்டினும் சந்தித்துப் பேசுவார் என்று ரஷ்ய வெளியுறவுக் கொள்கை உதவியாளர் யூரி உஷாகோவ் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த ஆண்டு இவர்கள் இருவரும் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறை என்றாலும், தொலைபேசி மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும் அவர் கூறினார்.
ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிறப்பு உத்திபூர்வ பங்காளித்துவம், 2010ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் முதல் முறையாகக் குறிப்பிடப்பட்டது என்றும், இந்த ஆண்டு அதன் 15ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது என்றும் திரு உஷாகோவ் மேலும் கூறினார்.
ரஷ்ய எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு 25% அபராதம் உட்பட, இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பின் நிர்வாகம், 50 விழுக்காடு வரி விதித்துள்ளது. ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று இந்த வரிவிதிப்பு, நடப்புக்கு வந்தது. இம்முடிவு, பல்வேறு துறைகளில் வருவாய்ச் சரிவுக்கும் வேலை இழப்புகளுக்கும் வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.
எண்ணெய் குறித்த அமெரிக்காவின் அதிருப்தி குறித்து பதில் அளித்த இந்தியா, தனது எரிசக்தித் தேவைகள் முக்கியமானவை என்று கூறி, தனது முடிவில் உறுதியாக இருப்பதாகக் கூறுகிறது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை மிகவும் துன்பகரமானது என்று குறைகூறிய இந்தியா, நாட்டின் தேசிய நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்த மாத தொடக்கத்தில், திரு புட்டின், திரு மோடியுடன் பலமுறை தொலைபேசியில் உரையாடினார். அப்போது, 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்தர மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவிற்கு வரும்படி அதிபர் புட்டினுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.