ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பஹல்காமில், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ‘கியூஆர்’ குறியீடு (QR Code) அடிப்படையிலான புதிய அடையாள முறையை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி பைசரன் புல்வெளியில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிறகு, பயணிகளின் நம்பிக்கையை மீட்டெடுக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்புதிய முறையின்கீழ், குதிரை ஓட்டுநர்கள், சிறு வியாபாரிகள், புகைப்படக் கலைஞர்கள், வெளிமாநில விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் உண்மைத்தன்மையையும் எளிதில் கண்டறிய முடியும்.
இதன்மூலம் முறையாகப் பதிவு செய்யப்பட்ட, உண்மையான சேவை வழங்குநர்களைச் சுற்றுலாப் பயணிகள் எளிதில் அடையாளம் கண்டறிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் பிரத்யேக ‘கியூஆர்’ குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனைச் சுற்றுலாப் பயணிகள் தங்களது கைப்பேசிகள் மூலம் ‘ஸ்கேன்’ செய்வதால் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி, ஆதார் எண், கைப்பேசி எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும்.
இது போலி நபர்களிடம் ஏமாறுவதைத் தடுப்பதுடன், அங்கீகரிக்கப்பட்ட நபர்களிடம் மட்டுமே சேவைகளைப் பெறுவதை உறுதி செய்கிறது.
சுற்றுலாத் துறையைச் சார்ந்த பல்வேறு தரப்பினரும் இந்த முயற்சியை மனதார வரவேற்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சேவைகளின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவும் அரசு எடுத்துள்ள மிகச் சிறந்த நடவடிக்கை இது,” எனப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த முயற்சி பஹல்காமின் சுற்றுலாத்துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

