பெங்களூர்: அமெரிக்காவைச் சேர்ந்த குவெல்காம் என்ற சில்லு தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம் அனைத்துலக அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
நிறுவனத்தின் மறுவடிவமைப்பை அடுத்து இந்தியாவில் முதல் கட்டமாக ஏறக்குறைய 1,000 பேர் ஆட்குறைப்பு செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் மேலும் பலர் ஆட்குறைப்புக்கு ஆளாகக்கூடும். மூத்த பொறியாளர்களும் அண்மையில் வேலையில் சேர்ந்தவர்களும் பாதிக்கப்படலாம் என்று அறியப்படுகிறது.
அனைத்துலக ஊழியரணியில் கிட்டத்தட்ட ஏழு விழுக்காடு அதாவது 3,600 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஃபைனென்ஷல் எக்ஸ்பிரெஸ் செய்தி தெரிவித்தது. நிறுவனத்தின் அனைத்துலக அளவில் 52,000 பேர் வேலை செய்கின்றனர்.
இந்தியாவில் 20,000 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, சென்னை ஆகிய பெருநகரங்களில் நிறுவனத்தின் வளாகங்கள் செயல்படுகின்றன.
தங்களுக்கு வழங்கப்பட்ட ஆட்குறைப்பு இழப்பீடு குறித்த தகவல்களை ஒருசில ஊழியர்கள் இணையத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். மூன்று மாதச் சம்பளமும் நிறுவனத்தில் வேலைசெய்த ஒவ்வோர் ஆண்டுக்கும் கூடுதல் ஒரு மாதச் சம்பளமும் இழப்பீடாக வழங்கப்பட்டதை அவர்கள் குறிப்பிட்டனர்.
இதற்குமுன், இம்மாதத் தொடக்கத்தில் கென்வா நிறுவனம் அனைத்துலக அளவில் 1,271 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது.
ஆட்குறைப்பு செய்யப்பட்டோரின் புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் ‘லேஆஃப்ஸ்.எஃப்வய்ஐ’ (Layoffs.fyi) தளம், இவ்வாண்டில் இதுவரை 350 நிறுவனங்களின் தொழில்நுட்பப் பணிகளிலிருந்து 142,000 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டதாகத் தெரிவித்தது.
