அவதூறு வழக்கிலிருந்து ராகுல் காந்தி விடுதலை

அவதூறு வழக்கிலிருந்து ராகுல் காந்தி விடுதலை

படம்: ராய்ட்டர்ஸ்

26 Oct 2026 - 7:59 pm

1 mins read

லக்னோ: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்த அவதூறு வழக்கிலிருந்து, காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை குற்றமற்றவர் என அறிவித்து நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

பாஜக நிர்வாகி விஜய் மிஸ்ரா என்பவர் தொடுத்த அந்த வழக்கை, உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. அது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் ஆகும்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடகத் தேர்தல் பிரசாரத்தின்போது, அப்போதைய பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித்ஷா குறித்து ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி, வழக்கு தொடுக்கப்பட்டது.

ஏறக்குறைய எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், திங்கட்கிழமை (அக்டோபர் 26) சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையானார். அப்போது, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவரை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தீர்ப்பைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தின் வெளியே திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

குறிப்புச் சொற்கள்