டெல்லி: நடைபாதைகளில் காத்திருந்த நோயாளிகளுக்கு ராகுல் காந்தி ஆறுதல்

1 mins read
5e634c4d-4262-46ef-bc94-6f8c7d18eb1e
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு நடைபாதைகளில் தங்கிக் காத்திருந்த நோயாளிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து ஆறுதல் கூறினார். - படம்: ஊடகம்

புதுடெல்லி: புதுடெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக வெளியூர்களில் இருந்து வந்து, மருத்துவமனைக்கு வெளியேயுள்ள சாலையோரம் காத்திருந்த ஏராளமானோரைக் கண்டு நலம் விசாரித்த காங்கிரசின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வியாழக்கிழமை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே தங்கியிருந்த நோயாளிகள், அவர்களின் உறவினர்களை சந்தித்து அவர்களின் குறைகள், பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர், தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நோய் சுமை, கடும் குளிர், அரசின் பாராமுகம், தொலைதூரங்களில் இருந்து சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையைத் தேடிவந்து வெளியே தங்கியிருக்கும் நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்தேன்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்திருக்கும் நோய்வாய்ப்பட்டவர்கள் சாலையோரம், சுரங்கப்பாதைகளில் தங்குவதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். குளிர், பசி, வசதியின்மைக்கு மத்தியில் நம்பிக்கையை மட்டும் பற்றிக்கொண்டு காத்திருக்கின்றனர்.

“மத்திய அரசும் டெல்லி அரசும் பொதுமக்களுக்கான தங்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் முற்றிலும் தவறிவிட்டன,” என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்