போராட்டங்களை ஒருங்கிணைக்க ‘சத்யாகிரகா’ இணையத்தளம் தொடங்கிய ராகுல் காந்தி

போராட்டங்களை ஒருங்கிணைக்க ‘சத்யாகிரகா’ இணையத்தளம் தொடங்கிய ராகுல் காந்தி

படம்: தினமணி

04 Oct 2026 - 1:44 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவில் பல்வேறு கோரிக்கைகளுக்காக பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில், ‘சத்யாகிரகா’ என்ற புதிய மின்னிலக்க இணையத்தளத்தை இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் அறிமுகப்படுத்தினார். மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவரது அகிம்சைவழி போராட்டத் தத்துவத்தை நினைவூட்டும் வகையில் இந்தத் தளம் தொடங்கப்பட்டுள்ளது.

நாட்டில் மாணவர்கள், விவசாயிகள், பழங்குடியின மக்கள், பெண்கள், இளைஞர்கள் எனப் பலதரப்பினரும் தங்கள் உரிமைகளுக்காகத் தனித்தனியாகப் போராடி வருகின்றனர். அவ்வாறு தனித்து உயர்த்தப்படும் குரல்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போவதைத் தடுக்க, இந்த இணையத்தளம் ஒரு பாலமாகச் செயல்படும் என்றும் நீதிக்காகப் போராடும் எந்தவொரு நபரும் அல்லது அமைப்பும் தங்கள் போராட்டம் குறித்த விவரங்களை இந்தத் தளத்தில் வெறும் இரண்டு நிமிடங்களில் பதிவிட முடியும் என்றும் காங்கிரஸ் கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவரங்கள் பதிவேற்றப்பட்டவுடன், நாட்டின் ஊடாடும் (Interactive) வரைபடத்தில் அப்போராட்டம் குறித்த விவரங்கள் தோன்றும். இதன் மூலம், ஒரே மாதிரியான கோரிக்கைகளுக்காக நாட்டின் பிற பகுதிகளில் யார் யாரெல்லாம் போராடுகிறார்கள் என்பதை அனைவரும் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.

இது குறித்து விவரித்த ராகுல் காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு ஆதரவளிப்பது தமது கடமை என்று தெரிவித்தார். மேலும், இத்தளத்தில் பதிவிடப்படும் மக்கள் கோரிக்கைகளுக்கு, நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவது உட்பட சாத்தியமான அனைத்து ஆதரவுகளையும் காங்கிரஸ் கட்சி வழங்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இத்தளம் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே 150க்கும் மேற்பட்ட போராட்ட விவரங்கள் பதிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக, கல்வித்துறை சார்ந்த சிக்கல்கள், தேர்வுத்தாள் கசிவு தொடர்பான போராட்டங்களே அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன.

குறிப்புச் சொற்கள்