தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணிப்பூரிலிருந்து மும்பை வரை ராகுல் காந்தி 6,200 கி.மீ. யாத்திரை

1 mins read
eb42138c-ae7d-42dc-a235-523f5ce71c38
14 மாநிலங்கள் வழியாக பேருந்துப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. - படம்: இபிஏ

புதுடெல்லி: அடுத்த ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் நீண்ட பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திக்க இருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

‘பாரத நியாய யாத்திரை’ என்ற அந்தப் பயணம் வரும் ஜனவரி 14ஆம் தேதி தொடங்கவுள்ளது. கிழக்கில் மணிப்பூரில் தொடங்கும் இந்த யாத்திரை, மேற்கில் மும்பையில் முடிவடைய உள்ளது.

மொத்தம் 14 மாநிலங்கள், 85 மாவட்டங்கள் வழியாக 6,200 கிலோமீட்டர் கடக்கவுள்ள ராகுல், மார்ச் 20ஆம் தேதி தமது பயணத்தை முடித்துக்கொள்வார்.

இந்த யாத்திரை குறித்த அறிவிப்பை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலும் அதன் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷும் செய்தியாளர் சந்திப்பின்போது வெளியிட்டனர்.

“மணிப்பூர், நாகலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 14 மாநிலங்களில் ராகுல் பேருந்து வழியாக இந்த யாத்திரையை மேற்கொள்வார்,” என்று திரு வேணுகோபால் சொன்னார்.

முன்னதாக, கடந்த 2022 செப்டம்பர் 7 முதல் 2023 ஜனவரி 30 வரை ராகுல் ‘பாரத ஜோடோ யாத்திரை’யை மேற்கொண்டார். அப்போது, 3,970 கிலோமீட்டர் நடந்தே அந்த யாத்திரையை நிறைவுசெய்த ராகுல், இம்முறை பேருந்தில் செல்லவிருக்கிறார்.

‘அனைவருக்கும் நியாயம் வேண்டும்’ என்ற கருப்பொருளுடன் கூடிய இந்த யாத்திரையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மணிப்பூர் தலைநகர் இம்பாலில் தொடங்கி வைக்கவுள்ளார்.

குறிப்புச் சொற்கள்