தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘வாக்காளர் அதிகார யாத்திரை’ பீகாரில் இன்று ராகுல் துவக்கம்

2 mins read
5654c4db-f47f-4da2-a9bd-bee205505371
அரசியலமைப்பைக் காப்பாற்றும் நோக்கில் நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் ராகுல் காந்தி அறிவித்திருந்தார். அதன்படி, பீகாரில் ஞாயிற்றுக்கிழமை தனது பயணத்தைத் தொடங்கினார். - படம்: ஊடகம்

பாட்னா: வாக்காளர்களின் உரிமைகளை உறுதி செய்யும் வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பீகாரில் இருந்து நடைப்பயணம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

‘வாக்காளர் அதிகார யாத்திரை’ என்ற முழக்கத்துடன் அவர் தொடங்கியுள்ள இந்தப் பயணமானது, 16 நாள்கள் நீடிக்கும். செப்டம்பர் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த நடைப்பயணத்தின்போது அவர் 1,300 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து பொதுமக்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

பீகாரில் அண்மையில் வாக்காளர் பட்டியலில், ‘சிறப்புத் தீவிர திருத்த’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதேபோன்று பல்வேறு மாநிலங்களில் வாக்குகள் திருடப்பட்டதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, இவ்வாறு குறுக்கு வழியில் பாஜக தேர்தலில் வெற்றி பெற்றதாக சாடியுள்ளார்.

மேலும், அரசியலமைப்பைக் காப்பாற்றும் நோக்கில் நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவித்திருந்தார். அதன்படி, பீகாரில் ஞாயிற்றுக்கிழமை தனது பயணத்தைத் தொடங்கினார்.

இதுதொடர்பாக தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அடுத்த 16 நாள்களில், 20 மாவட்டங்களுக்குச் சென்று, 1,300 கிலோ மீட்டர் தூரம் நடந்து, ஜனநாயக உரிமையைப் பாதுகாக்கப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“’ஒரு நபர், ஒரு வாக்கு’ என்பதைப் பாதுகாக்க, அரசியலமைப்பைக் காப்பாற்ற பீகாரில் எங்களுடன் சேருங்கள்,” என்று பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த யாத்திரை இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா செய்தியாளர்களிடம் கூறினார்.

அவர், “ராகுல் காந்தி இவ்வாறு ஒரு பயணத்தை மேற்கொள்ளும் போதெல்லாம், ஜனநாயகத்தின் ஒரு புதிய பக்கத்தை பார்த்துள்ளோம். இது நம் அனைவரின் இருப்புக்கான போராட்டத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும்,” என்றார் பவன் கேரா.

நடைப்பயணத்துக்கு முன்பு பேசிய காங்கிரஸ் தலைவர் கண்ணையா குமார், வாக்குகளைத் திருடாமல் ஓர் அரசாங்கத்தை அமைப்போம் என்றும் இல்லாவிட்டால் இந்தியா பிழைக்காது என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், “ஜனநாயகத்தைக் காப்பாற்ற நாங்கள் பல தியாகங்களைச் செய்துள்ளோம். எதிர்காலத்திலும் நாங்கள் அதைத் தொடர்ந்து செய்வோம். எங்கள் வாக்குரிமையை நாங்கள் அழிக்க விடமாட்டோம். நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். இது அவசரநிலையின் போது இருந்ததை விட மோசமானது,” என்றார்.

ராகுல் காந்தியின் நடைப்பயணம், செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் மிகப் பெரிய பேரணியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிறைவுநாள் பேரணியில் இண்டியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்