ஹைதராபாத்: தெலுங்கானாவின் பெத்தபள்ளியில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் 20 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ராகவபுரம் - ராமகுண்டம் இடையே இரும்புத் தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 44 பெட்டிகளில் 11 பெட்டிகள் நவம்பர் 12ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டதாகத் தெற்கு மத்திய ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
இதனால், அவ்வழியில் செல்லக்கூடிய 10 ரயில்கள் வேறு பாதைக்குத் திருப்பி விடப்பட்டதாகவும் 20 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில் இயக்கத்தை தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்கள் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதேபோல சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களின் புறப்பாடும் தாமதமாகி உள்ளது.
அப்பகுதியில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

