உலகத் தரத்தில் தற்காப்புக் கருவிகளை உற்பத்தி செய்ய ராஜ்நாத் சிங் அழைப்பு

உலகத் தரத்தில் தற்காப்புக் கருவிகளை உற்பத்தி செய்ய ராஜ்நாத் சிங் அழைப்பு

படம்: பிஐபி

27 Oct 2026 - 5:45 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியத் தற்காப்புத்துறை தற்சார்பை நோக்கி நகர்வதில் ‘இரண்டாம் கட்ட’ நடவடிக்கைகள் தொடங்குவதாக அதன் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அதிநவீன, உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியக் கடற்படை சார்பில் புதுடெல்லியில் நடத்தப்பட்ட ‘சுவாவ்லாம்பன் 2026’ (Swavlamban 2026) கருத்தரங்கில் உரையாற்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ஆத்மநிர்பார்த்தா 2.0’ எனப்படும் தற்சார்புத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.

குறைந்த செலவில், மிகச் சிறந்த செயல்பாட்டுத் திறனுடன், உலக அளவில் போட்டியிடக்கூடிய தற்காப்புக் கருவிகளை உற்பத்தி செய்ய வேண்டியது அவசியம் என்றும் ஆராய்ச்சித் துறையை வலுப்படுத்துவதுடன், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வலுவான விநியோகச் சங்கிலியை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்குத் தற்காப்புத் துறையின் இந்தத் தொழில்நுட்ப உயர்வு மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்றார் அவர்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்படைக் கப்பல்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், கப்பல் கட்டும் செலவைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தோல்விகளைக் கண்டு பின்வாங்காமல், இஸ்ரேல், தென்கொரியா போன்ற நாடுகளைப் போல ஆராய்ச்சிகளில் புதுமைகளைப் புகுத்த வேண்டும் எனத் திரு ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார்.

ராணுவ தளவாடங்கள் கொள்முதல்

இதனிடையே, இந்திய ராணுவ முப்படைப் பிரிவுகளின் தற்காப்பு, போர்த்திறனை அதிநவீன அளவில் மேம்படுத்துவதற்காக ரூ.2.12 லட்சம் கோடி மதிப்பிலான ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்யத் தற்காப்பு அமைச்சு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

தற்காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற தற்காப்புக் கொள்முதல் மன்றக் கூட்டத்தில் இந்த முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது.

இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக, மொத்தக் கொள்முதலில் ஏறக்குறைய 82 விழுக்காடு உள்நாட்டுத் தொழிற்துறைகளிடம் இருந்தே பெறப்பட உள்ளது.

இது நாட்டின் ‘சுயசார்பு பாரதம்’ (Aatmanir bharta) இலக்கை நோக்கி வைக்கப்பட்டுள்ள வலுவான அடி என இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்