புதுச்சேரி: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என்று என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும் முதலமைச்சருமான ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியின் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் ஆண்டு விழாவில் அவர் பேசியபோது இதனைத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு பல்வேறு கேள்விகளை அரசியல் ரீதியாக உருவாக்கியுள்ளது.
புதுவையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காரைக்காலை ஒட்டியுள்ள நாகை, மயிலாடுதுறை ஆகிய தமிழகப் பகுதிகளில் ரங்க சாமிக்கு செல்வாக்கு உள்ளது. இந்த மாவட்டங்களில் அவர் சார்ந்த சமூகத்தினரும் அதிகளவில் உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், முதலமைச்சர் ரங்கசாமிக்கு நெருக்கமானவர்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்தபிறகு சென்னையில் நடிகர் விஜய்யை ரங்கசாமி நேரில் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு நடிகர் விஜய், ரங்கசாமியைத் தொடர்ந்து சந்தித்துப் பேசி வருகிறார். இதில் தவெக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் இணைப்புப் பாலமாக செயல்பட்டு வருகிறார். நடிகர் விஜய் கட்சி தொடங்கியபோது, ரங்கசாமி பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இதனால் விஜய்யுடன் ரங்கசாமி கூட்டணி அமைக்கக் கூடும் என்ற ஊகம் வலுத்து வருகிறது.
இந்த எண்ணத்தில்தான் தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார் என என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் கருதுகின்றனர்.
தனது கொள்கை விரோதியாக திமுக, பாஜகவை தவெக மாநாட்டில் நடிகர் விஜய் அறிவித்துள்ளார். இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, 2026 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி நீடிக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அப்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்,” என்று ரங்கசாமி பதிலளித்தார்.
தற்போது என்.ஆர்.காங்கிரஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணியைத் தொடரவேண்டும் என்று பாஜக விரும்புகிறது.
தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என்ற அறிவிப்பு இந்தக் கூட்டணியைக் கேள்விக்குறியாக மாற்றியுள்ளது.

