இலவசத் திட்டங்களால் மாநிலங்களுக்கு நெருக்கடி ஏற்படுவதாக ரிசர்வ் வங்கி கவலை

1 mins read
4cf482eb-08f2-4094-843a-0fcd42a833be
மாநிலங்கள் அறிவிக்கும் சலுகைகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதாக மத்திய வங்கி கூறுகிறது. - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை இணையத்தளம்

புதுடெல்லி: இந்தியாவில் மாநில அரசாங்கங்கள் பல்வேறு இலவசத் திட்டங்களை வழங்குவது கவலை அளிப்பதாக மத்திய வங்கியான ‘ரிசர்வ் வங்கி’ கூறியுள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், “விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயத்துக்கும் குடும்பங்களுக்கும் இலவச மின்சாரம், பெண்களுக்கும் இளையர்க்கும் உதவித்தொகை, இலவசப் போக்குவரத்து அறிவிப்பு எனப் பல மாநிலங்கள் இலவசச் சலுகைகளை வாரி வழங்குவது பல்வேறு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது,” என்று குறிப்பிட்டுள்ளது.

இதனால், சமூக நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்வது பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி கூறியது.

மேலும், “உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டதுடன் ஆய்வு, மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதும் கணிசமாகக் குறைந்துள்ளது. 2018-19ஆம் நிதியாண்டு முதல் மாநிலங்கள் வழங்கும் மானியங்கள், நடப்பு நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அளவைவிட இரண்டரை மடங்கு அதிகரித்து ரூ.4.7 லட்சம் கோடி ஆகியுள்ளது,” என்று ரிசர்வ் வங்கி கூறியது.

குறிப்புச் சொற்கள்