30 வினாடிகளில் போராட்டத்தை நிறுத்தத் தயார்: ராகுல் காந்தி

30 வினாடிகளில் போராட்டத்தை நிறுத்தத் தயார்: ராகுல் காந்தி

கோப்புப் படம்: ஈடிவி பாரத்

27 Oct 2026 - 7:21 pm

1 mins read

புதுடெல்லி: இந்திய எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய ‘இண்டியா’ கூட்டணி சார்பாக, டெல்லியில் நவம்பர் 1ஆம் தேதி, ராம்லீலா திடலில் நடைபெற உள்ள பேரணியை ஒத்திவைக்க வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என டெல்லி வர்த்தகர்கள் அமைப்பு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளது.

தீபாவளிப் பண்டிகையின் உச்சகட்ட விற்பனைக் காலத்தில், பேரணி நடந்தால் தங்களுக்கு ரூ.10,000 கோடி வியாபாரம் பாதிக்கப்படும் என அந்த அமைப்பின் தலைவர் பிரீஜேஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என ராகுல் காந்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகத் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், டெல்லி வர்த்தகர்களின் கவலையை உணர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“ஆனால் வாக்குகள் திருடப்படும்போது உங்கள் கடைகளோ, சேமிப்போ பாதுகாப்பாக இருக்காது. தலைமைத் தேர்தல் ஆணையரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்தால் இந்தப் போராட்டம் 30 வினாடிகளில் நிறுத்தப்படும்,” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பேரணியில் 10 லட்சம் தொண்டர்களும் 20,000 வாகனங்களும் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்