புட்டினுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு: கிரெம்ளின் பாராட்டு

2 mins read
5c88d9ac-9231-4180-9937-089df1268447
கிரெம்ளின் மாளிகை. - படம்: ஊடகம்

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் புட்டினுக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பு, இந்தியா-ரஷ்யா இடையேயான உத்திபூர்வ நட்பின் அடையாளமாக இருந்ததாக கிரெம்ளின் மாளிகை பாராட்டு தெரிவித்தது.

இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை மாலை புதுடெல்லி வந்தடைந்த அதிபர் புட்டினை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். இதனை கிரெம்ளின் மாளிகை வரவேற்றுள்ளது.

ரஷ்ய அதிபர் இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் திமிட்ரி டெஸ்கோவ் தெரிவித்துள்ளார். இது இரு நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் உத்திபூர்வ நட்பின் அடையாளமாகும் என்றார்.

ரஷ்யாவும் இந்தியாவும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் நல்ல உறவைக் கடைப்பிடித்து வருவதாக அவர் கூறினார். இதனிடையே, வெளிநாட்டுத் தலைவர்களை இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்துப் பேசும் மரபை மத்திய பாஜக அரசு அறவே அனுமதிக்கவில்லை என ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டை பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா மறுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“மத்திய அரசு பாதுகாப்பற்றதாக உணர்வதால் வெளிநாட்டுத் தலைவர்கள் இந்திய எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று ராகுல் கூறியுள்ளார். ஆனால் ராகுல் காந்தியால் மத்திய அரசு ஏன் பாதுகாப்பற்றதாக இருக்க வேண்டும். அவர் தெரிவித்துள்ள கருத்துகள் பொறுத்தமற்றவை.

“இன்று உலகப் பொருளியலில் இந்தியா முக்கியமான சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் ராகுல் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அவரைச் சந்திக்க வேண்டாமென இந்திய அரசு கேட்டுக்கொள்வதாகக் கூறுவது பொறுப்பற்ற செயல்,” என்றும் சம்பித் பத்ரா மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்