அமராவதி: வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்துள்ளது. தெலுங்கானாவிலும் மழை தீவிரமாக உள்ளது.
விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. சில வட்டாரங்களில் அடுத்த சில நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனத்த மழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் குறைந்தது 9 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
விஜயவாடாவில் உள்ள மொகல்ராஜபுரம் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் சில வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஐவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதேபோல், குண்டூர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த மூவர் ஆற்றுப்பாலத்தை கடக்கும் போது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் காரில் இருந்த மூவரும் உயிரிழந்தனர்.
மேலும் கண்டாலயப்பேட்டா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடுகள் மீது கற்பாறைகள் விழுந்தன. இதில் 68 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.
சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் இரண்டு மாநிலங்களிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்தான பகுதியில் உள்ள பலர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் மகபூபாபாத்-கேசமுத்ரம் இடையேயான ரயில் தண்டவாளம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
விஜயவாடாவிலிருந்து செல்லும் 12 ரயில் சேவைகளை மத்திய தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
விஜயவாடா, குண்டூர் உள்ளிட்ட சில ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில், தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அடுத்த சில நாள்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.