இந்திய விசா நடைமுறைகளில் சீர்திருத்தம்

பிரிவுகள் 13லிருந்து 9ஆகக் குறைப்பு, விண்ணப்பப் படிவங்கள் 70% வரை எளிமையாக்கம்

இந்திய விசா நடைமுறைகளில் சீர்திருத்தம்

சுற்றுலா, மருத்துவம், கல்வி, வர்த்தகப் பயணங்களை ஊக்குவிக்க நடவடிக்கை
கோப்புப் படம்: விசா நியூஸ்

12 Nov 2026 - 1:26 pm

2 mins read

புதுடெல்லி: வெளிநாட்டினரின் இந்தியப் பயணத்தை எளிதாக்கும் நோக்கில், முக்கிய விசா பிரிவுகளை 13லிருந்து 9ஆகவும் துணைப் பிரிவுகளை 49லிருந்து 23ஆகவும் இந்தியா குறைத்துள்ளது.

2025 அக்டோபரில், பிரிவுகள் 22லிருந்து 13ஆகக் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலகத் தரத்திற்கு ஏற்ப இப்போது மேலும் எளிமையாக்கப்பட்டுள்ளது.

இத்துடன், 23 துணைப் பிரிவுகளிலும் விண்ணப்பப் படிவங்களில் உள்ள கேள்விகள் 65 முதல் 70 விழுக்காடு வரை குறைக்கப்பட்டுள்ளன.

புதிய கட்டமைப்பின் கீழ் வணிகம், தூதரகம், பணி, பத்திரிகை, மருத்துவம், அலுவல், மாணவர், வருகையாளர், இதரப் பிரிவுகள் என 9 முக்கிய விசாக்கள் இருக்கும்.

முன்னதாக இருந்த ‘சுற்றுலா விசா’ இனி ‘வருகையாளர் விசா’ (வி-1, வி-2) என அழைக்கப்படும். 30 நாள்கள் செல்லுபடியாகும் பலமுறை நுழைவு கொண்ட வி-1 விசா மூலம் சுற்றுலாவுடன் குறுகியகால வணிகச் சந்திப்புகள், மருத்துவ ஆலோசனைகள், யோகாசனம், இந்திய மொழி, கலைப் பயிற்சிகளில் ஈடுபடலாம். 1, 5 அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் வி-2 விசாவில் மலையேற்றப் பயிற்சிகளுக்கும் (6 மாத அனுமதி) இடமுண்டு.

‘இந்தியாவில் நலம்பெறுங்கள்’ திட்டத்தின்கீழ், வழக்கமான சிகிச்சைக்கு எம்-1 விசாவும், ஆயுஷ் சிகிச்சைக்கு எம்-3 விசாவும் ஓராண்டு காலத்திற்குப் பலமுறை நுழைவு வசதியுடன் வழங்கப்படும். நோயாளிகளுடன் வருவோருக்கு எம்-2, எம்-4 விசாக்கள் வழங்கப்படும்.

மாணவர் விசா எஸ்-1 (பள்ளி, பட்டப்படிப்பு), எஸ்-2 (ஆராய்ச்சி, வருகைதரு பேராசிரியர்கள், பயிற்சி) எனப் பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஸ்டடி இன் இந்தியா’ தளம் மூலம் சேரும் மாணவர்களுக்குக் கல்விக் காலம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் இ-எஸ்1 விசா கிடைக்கும்.

வணிக விசாவில் நீண்டகாலத் தொழில் தொடங்க பி-1 விசாவும் குறுகியகால ஒப்பந்தம், மாநாடுகள், விளையாட்டு, படப்பிடிப்பு, தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான உற்பத்தி முதலீட்டுப் பணிகளுக்கு B-2 விசாவும் வழங்கப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிகாட்டுதலின் கீழும் உள்துறை அமைச்சு ஆகஸ்ட் மாதம் இம்மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது 172 நாடுகளுக்கு மின்னணு விசா வழங்கப்படும் நிலையில், தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்ட பிறகு 2026 இறுதிக்குள் புதிய விசா நடைமுறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்