கத்தார் வெடிப்பில் மாண்ட 12 இந்தியர்களின் உடல்கள் தாயகத்திற்கு அனுப்பிவைப்பு

கத்தார் வெடிப்பில் மாண்ட 12 இந்தியர்களின் உடல்கள் தாயகத்திற்கு அனுப்பிவைப்பு

1 mins read
299ab073-d8dc-48f5-8753-4ae03f54eb05
ஜூன் 25ஆம் தேதி வியாழக்கிழமை நால்வரின் உடல்களும் அதற்கு மறுநாள் எண்மரின் உடல்களும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. - படம்: எக்ஸ்/கத்தாருக்கான இந்தியத் தூதரகம்

டோஹா: கத்தாரில் ஜூன் 21ஆம் தேதி நேர்ந்த ஆலை வெடிப்பில் உயிரிழந்த 12 இந்தியர்களின் உடல்களும் தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக டோஹாவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை நால்வரின் உடல்கள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு மறுநாள் எஞ்சிய எட்டுப் பேரின் உடல்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

‘கத்தார் எனர்ஜி எல்என்ஜி’ நிறுவனத்தால் இயக்கப்படும் ராஸ் லஃபான் தொழில்துறை நகரில் உள்ள ‘பர்சான்’ உள்ளூர் எரிவாயு விநியோக ஆலையில் அந்த வெடிப்பு ஏற்பட்டது. அதில் இந்தியர்கள் 12 பேர், பாகிஸ்தானியர் ஒருவர் என 13 பேர் உயிரிழந்தனர்.

உடல்களை விரைவாகத் தாயகம் அனுப்புவதற்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவிய கத்தார் அதிகாரிகள், இந்தியச் சமூக அமைப்புகள், இந்திய அரசு முகமைகளுக்குத் தூதரகம் நன்றி தெரிவித்துக்கொண்டது.

இதற்கிடையே, கத்தாருக்கான இந்தியத் தூதர் விபுலும் தூதரக அதிகாரிகளும் வெள்ளிக்கிழமை அல் கோர் பகுதிக்குச் சென்று, விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். காயமடைந்த அனைவர்க்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தூதரகம் தெரிவித்தது.

கத்தாருக்கான இந்தியத் தூதர் விபுல், தூதரக அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) அல் கோர் பகுதிக்குச் சென்று, விபத்தில் காயமடைந்த இந்தியர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கத்தாருக்கான இந்தியத் தூதர் விபுல், தூதரக அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) அல் கோர் பகுதிக்குச் சென்று, விபத்தில் காயமடைந்த இந்தியர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். - படம்: எக்ஸ்/கத்தாருக்கான இந்தியத் தூதரகம்

அந்த ஆலை வெடிப்பில் கத்தார், இந்தியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ், நேப்பாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 66 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்