புதுடெல்லி: இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஜனவரி 26ஆம் தேதி கையெழுத்தானதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மேலும், ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ எனக் குறிப்பிடப்படும் அந்த ஒப்பந்தம், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 விழுக்காட்டையும் உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கையும் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்திய எரிசக்தி வார விழாவில் காணொளி மூலம் உரையாற்றியபோது மோடி இவ்வாறு கூறினார்.
இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் பெரிய வாய்ப்புகளை உருவாக்கும் எனத் தெரிவித்த அவர், உலகின் இரு முக்கிய பொருளியலுக்கு இடையேயான பங்காளித்துவத்திற்கு அந்த ஒப்பந்தம் சிறந்த உதாரணம் என்றார்.
இந்த ஒப்பந்தம் 140 கோடி இந்தியர்களுக்கும் கோடிக்கணக்கான ஐரோப்பியர்களுக்கும் நிறைய வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளதாக அவர் சுட்டினார்.
இந்தியாவின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய மன்றத் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அவர்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தெரிவித்தன.
18 ஆண்டுகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு நடைமுறைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஆடை, காலணி உள்ளிட்ட கிட்டத்தட்ட 90 விழுக்காடு பொருள்களுக்கு வரி விலக்கு அல்லது வரி குறைப்புக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்தியாவிலிருந்து ரஷ்ய எண்ணெய் பொருள்களை வாங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையை அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கடுமையாக விமர்சித்தார்.
ஏபிசி செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில், “ரஷ்ய எண்ணெய் இந்தியாவுக்கு வருகிறது. அங்கு சுத்திகரிக்கப்பட்ட பிறகு, ஐரோப்பாவுக்கு வருகிறது. தங்களுக்கு எதிரான போருக்கு ஐரோப்பியர்களே நிதியளிக்கின்றனர்,” என்றார்.

