புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்திலும் அதன் கீழ் உள்ள கல்லூரிகளிலும் தமிழ் மொழியைக் கற்பிக்கும் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் செம்மொழியான தமிழுக்கு உரிய இருக்கைகளை உருவாக்க வேண்டும் என்றும் துணை அதிபரும் டெல்லி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஜகதீப் தன்கரை சந்தித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செவ்வாய்க் கிழமை இந்தச் சந்திப்பு நடைபெற்றது என்று தினமணி தகவல் தெரிவித்தது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் குறைந்து வரும் நிலையில் டெல்லி தமிழ் பள்ளி மாணவ, மாணவிகள் டெல்லி பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர முடியாத நிலை போன்ற பல்வேறு பிரச்சினைகளை டெல்லி தமிழ் சங்கத்தினர், டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், டெல்லிவாழ் தமிழர்கள் மத்திய செய்தி ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் எல்.முருகனிடம் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து துணை அதிபர் ஜகதீப் தன்கரை துணைமைச்சர் எல்.முருகன் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.
இந்தச் சந்திப்பில் டெல்லி தமிழ் சங்கப் பொறுப்பாளர்களான பொதுச் செயலாளர் ரா. முகுந்தன், பொருளாளர் அருணாச்சலம், முன்னாள் செயற்குழு உறுப்பினர் முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
டெல்லியில் உள்ள தமிழ் மாணவர்களுக்கு கல்விச் சூழலில் நெருக்கடிகள் உள்ளன. டெல்லியில் சுமார் 14 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
டெல்லி தமிழ்க் கல்விக் கழகம் சார்பில் 7 தமிழ்ப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இங்கிருந்து ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவெளியேறுகின்றனர். தமிழ்ப் பாடத்தில் 95 விழுக்காடு மதிப்பெண் பெற்றும் டெல்லி கல்லூரிகளில் சேர அவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை என்று கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று டெல்லிப் பல்கலைக்கழகத்தின் திறந்த நிலைக் கல்வி மையத்திலும் பேராசிரியர் பணி ஓய்வுக்குப் பிறகு கடந்த 2 ஆண்டுகளாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் மொத்தம் 64 கலை, அறிவியல் கல்லூரிகள் இருந்தும் தமிழ்ப் பயிலும் வாய்ப்பில்லாத சூழ்நிலை உள்ளது என்றும் வலியுறுத்தப்பட்டது.

