பெங்களூரு: எட்டாவது உலகத் திருக்குறள் மாநாட்டை இலங்கை அரசு சார்பில் அந்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் நடத்த வேண்டும் எனக் கர்நாடகாவைச் சேர்ந்த தமிழ் அமைப்புகள் இலங்கை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளன.
பெங்களூருக்கு வருகை தந்த இலங்கைப் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் துறை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், அங்குத் தாய்மொழி கூட்டமைப்பு, திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் எஸ்.டி.குமார் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்துப் பேசினர்.
அந்தச் சந்திப்பின்போது பேசிய எஸ்.டி.குமார், கடந்த ஜூலை 5ஆம் தேதி பெங்களூருவில் 7வது திருக்குறள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதையும் அதில் இந்தியர்கள் மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதையும் நினைவுகூர்ந்தார்.
அதன் தொடர்ச்சியாக, 8வது உலகத் திருக்குறள் மாநாட்டை இலங்கை அரசு சார்பில் இலங்கையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அதற்குக் கர்நாடகத் தமிழ் அமைப்பினர் முழு ஒத்துழைப்பும் உறுதுணையும் வழங்கத் தயாராக உள்ளனர் என்றும் கூறினார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், அக்கோரிக்கை குறித்து தங்கள் நாட்டு அரசுடன் விரிவாகக் கலந்து பேசி உரிய முடிவெடுக்கப்படும் என்றார்.
எட்டாவது உலகத் திருக்குறள் மாநாட்டை இலங்கையில் நடத்துவது பற்றி நல்ல முடிவை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் உறுதியளித்தார்.
